சென்னை – மும்பை இடையே அதிவேக ரயில்களுக்கான வழித்தடம் அமைப்பது குறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணியை சர்வதேச ரயில்வே நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தின் லோக்சபாவில் அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியதாவது:
மும்பை – ஆமதாபாத் இடையே அதிவேக புல்லட் ரயிலுக்கான வழித்தடம் அமைக்கும் பணி, அடுத்த 6 ஆண்டுகளில் நிறைவடையும். புல்லட் ரயிலின் கட்டணம், மும்பை – ஆமதாபாத் இடையிலான விமானக் கட்டணத்தைவிட குறைவாக இருக்கும். மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடிய இந்த ரயில் மூலம் மும்பை – ஆமதாபாத் இடையிலான 508 கி.மீ. தொலைவை 2 மணி நேரத்தில் கடந்துவிட முடியும். தற்போது இத்தொலைவைக் கடக்க துரந்தோ ரயில் 7 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.
புல்லட் ரயில் திட்டத்துக்கான ரூ.97,626 கோடி செலவில் 80 சதவீத தொகை ஜப்பான் கடனுதவி மூலம் பெறப்படுகிறது. மும்பை – ஆமதாபாத் போல இதர நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரயிலை இயக்குவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.
மும்பை – சென்னை, தில்லி – கொல்கத்தா, தில்லி – நாகபுரி, மும்பை – நாகபுரி ஆகிய நகரங்களுக்கு இடையே அதிவேக ரயில்களுக்கான வழித்தடம் அமைப்பது குறித்த சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளும் பணி, சர்வதேச ரயில்வே நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, சென்னை – பெங்களூரு – மைசூர், தில்லி – கான்பூர், நாகபுரி – கோவா, மும்பை – ஆமதாபாத், சென்னை – ஹைதராபாத், நாகபுரி – செகந்திராபாத் ஆகிய நகரங்களுக்கு இடையே ஓரளவு அதிவேக ரயில்களுக்கான வழத்தடங்கள் அமைப்பது குறித்த சாத்தியக் கூறு ஆய்வுகளும் நடத்தப்பட உள்ளன என்றார் சுரேஷ் பிரபு.
English Summary :Bullet train between Chennai and Mumbai. In the Lok Sabha, Minister Suresh Prabhu Information