BSNL-231215தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இணையாக கடுமையான போட்டிகளை சமாளித்து பி.எஸ்.என்.எல் வெற்றிகரமாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது. இந்நிலையில் தெருமுனை முகாம்கள் மூலம் சேவை வழங்கி, அதன்மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை பி.எஸ்.என்.எல் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

பி.எஸ்.என்.எல் சென்னை மண்டலம் மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் தற்போது சுமார் 8 லட்சம் தரைவழித் தொலைபேசி வாடிக்கையாளர்களும், 15 லட்சம் செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களும் உள்ளனர். இவர்களில் 50 சதவீதத்தினர் பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட் சேவையையும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தொலைபேசி பழுது, செல்லிடப்பேசி வாடிக்கையாளர் சேவையில் அதிருப்தி, முன்னணி போட்டி நிறுவனங்களின் கவர்ச்சிகரமான வாடிக்கையாளர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருவதாகவும் இதனை தவிர்க்கவும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் சென்னை மண்டல கோட்டப் பொறியாளர் அலுவலகங்களுக்கு உள்பட்ட பகுதிகளிலும், தமிழகத்தின் இதர பகுதிகளிலும் பி.எஸ்.என்.எல் வியூகம் வகுத்துள்ளது.

இதற்காக, சென்னை மண்டலப் பகுதிகளில் தெருமுனை முகாம்கள் மூலம் வாடிக்கையாளர்களை நேரடியாகச் சந்தித்து விரைவான சேவையை வழங்கவும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பிஎஸ்என்எல் களத்தில் இறங்கியுள்ளது.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல் சென்னை மண்டல உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாட்டின் தொலைத்தொடர்பு சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் முன்ணனி நிறுவனமாக பிஎண்என்எல் திகழ்கிறது. தொலைபேசி பழுதுகள், செல்லிடப்பேசி, அகண்ட அலைவரிசை சேவைகள் தொடர்பாக வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைகின்றனர். அதோடு, வாடிக்கையாளர்கள் சேவை எண்ணில் தொடர்பு கொண்டாலும் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காமல் பி.எஸ்.என்.எல் இணைப்பு வேண்டாம் எனப் பொதுமக்கள் திருப்பி அளித்து விடுகின்றனர். இத்தகைய பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில், தெருமுனை முகாம்கள் மூலம் வாடிக்கையாளர்களை நேரிடையாகச் சந்தித்து சேவையை வழங்கி வருகிறோம்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பிஎஸ்என்எல் கோட்டப் பொறியாளர் அலுவலகங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தெருமுனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. இவற்றின் மூலம், வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்து பிஎஸ்என்எல் தொலைபேசித் திட்டங்கள், சேவைகள் குறித்து ஊழியர்கள் விளக்கி வருகின்றனர்.

மேலும்பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பை துண்டித்த வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களது குறைகளை ஊழியர்கள் கேட்டறிகின்றனர். இதன்மூலம்,
வாடிக்கையாளர் எந்தக் காரணத்துக்காக பிஎஸ்என்எல் சேவையை திருப்பி அளித்தார் என்பதைக் கண்டறிந்து வருகிறோம். அதன்பிறகு, வாடிக்கையாளர்களுக்கு விரைந்து சேவையை அளிக்க உறுதியளிக்கப்படுகிறது. பின்னர், அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் புதிய இணைப்பை அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இத்தகைய நடவடிக்கைகள் மூலம், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றயன என்று கூறினார்.

English Summary : The new strategy will lead to increase the customer base of BSNL