திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் திருவண்ணாமலை நகரின் மைய பகுதியில் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி சுமார் 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள்.
பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். பங்குனி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று இரவு 7.16 மணிக்கு தொடங்கியது. பவுர்ணமியை முன்னிட்டு பகலில் சிலர் வெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்றனர். இரவில் ஆயிரக்கணக்கானோர் கிரிவலம் சென்றனர்.
தற்போது கிரிவலப் பாதையில் ரூ.65 கோடியில் நடைபாதை, வடிகால் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்யும் பணி நெடுஞ்சாலை துறை மூலம் நடைபெற்று வருகிறது. கிரிவலப் பாதையில் குறிப்பிட்ட சில இடங்களில் நடைபாதைகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் அமர்வதற்கு ஏற்ப இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் காற்றடிப்பான் (ஏர் கம்பரசர்) மூலம் காஞ்சி ரோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையிலும், அண்ணாநுழைவு வாயிலில் இருந்து அபய மண்டபம் வரை உள்ள நடைபாதையிலும் சுத்தம் செய்யப்பட்டது.
இன்று (சனிக்கிழமை) மாலை 6.30 மணி வரை பவுர்ணமி உள்ளதால், இன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
English Summary: Thousands of Devotees are Kirivalam in Thiruvannamalai on account of Full Moon day.