ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், டெல்லி உள்படப் பல மாநிலங்களில் ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாமல் காலியாகக் கிடக்கின்றன. பணமதிப்பு நீக்க காலம் மீண்டும் வந்துவிட்டதா என மக்கள் மனதில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், செயற்கையாக உருவாகியுள்ள இந்த பணத்தட்டுப்பாடு அடுத்த சில நாட்களில் தீர்க்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உறுதியளித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நாட்டில் பணப்புழக்கம் குறைந்தது. அதன்பின் புதிய ரூ.2000, ரூ.200, ரூ.500 நோட்டுகள் அச்சடித்து ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடப்பட்டபின் பணப்பழக்கம் ஓரளவுக்கு சீரடைந்தது.
இந்நிலையில், ஆந்திரா, கர்நாடகம், குஜராத், மத்தியப் பிரதேசம், பிஹார், தெலங்கானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே சந்தையில் பணப்புழக்கம் குறைந்து வந்துள்ளது. இதன் காரணமாக பல மாநிலங்களில் பல நகரங்களில் இருக்கும் ஏடிஎம்கள் பணம் இல்லாமல் காலியாகக் கிடந்தன.
இதனால், பணமதிப்பிழப்பு காலம் மீண்டும் திரும்பிவிட்டதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவியது. இதற்கிடையே, மத்திய அரசு நிதித்தீர்வு மற்றும் டெபாசிட் காப்பீடு மசோதாவை நிறைவேற்றப்போகிறது என்று செய்தி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்த மசோதாவால் டெபாசிட் பணத்தை திரும்பப்பெற முடியாது என்ற அம்சம் இருப்பதாகக் கூறப்பட்டது. இதனால், ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் இருக்கும் தங்கள் தேவையில்லாவிட்டாலும் கூட தங்களின் பணத்தை வங்கியில் இருந்து எடுத்து வீடுகளில் சேமிக்கத் தொடங்கினர். இதனால், அந்த மாநிலங்களில் செயற்கையான பணத்தட்டுபாடு ஏற்பட்டு வந்தது.
இதற்கிடையே மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், மத்திய அரசு அச்சடித்து வெளியிட்ட ரூ.2000 நோட்டு திடீரென மறைந்துவிட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ரூ.15 லட்சம் கோடிதான் இருந்தது. அதன்பின் மத்தியஅரசு ரூ.16.50 லட்சம் கோடி அச்சடித்து புழக்கத்தில்விட்டுள்ளது. இருந்து பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. ஏதோ சதி நடக்கிறது என்று எச்சரித்து இருந்தார்.
மேலும் ஏடிஎம்களில் பணம் இல்லாமல் நாட்கள் கணக்கில் காலியாக இருந்து வருவது தொடர்வதால், மக்கள் மத்தியில் ஒருவிதமான அச்சம் நிலவியது. இந்நிலையில், இதைப் போக்கும்வகையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் ட்விட்டரில் கூறுகையில், திடீரென, வழக்குத்துக்கு மாறான வகையில் பணத்தின் தேவை அதிகரித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் போதுமான அளவு கரன்சி இருப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் வங்கிகளுக்கு முறைப்படி அளிக்கப்படும். தற்காலிகமாக ஏற்பட்டுள்ள இந்த திடீர் பணப்பற்றாக்குறையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியும் விசாரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மத்திய நிதித்துறை இணைஅமைச்சர் எஸ்.பி.சுக்லா நிருபர்களிடம் கூறுகையில், கரன்சி பற்றாக்குறையாக இருக்கும் மாநிலங்களில்தான் இதுபோன்ற திடீர் பணப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க மாநிலவாரிய குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
அடுத்த 3 நாட்களில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும். தற்போது, அரசிடம் ரூ.1.25 லட்சம் கோடி இருப்பு இருக்கிறது. இதைச் சமமாக அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்து தருவதிலும் சிக்கல் இருக்கிறது. ஒரு சில மாநிலங்களில் இயல்புக்கும் அதிகமாக பணம் இருப்பு இருக்கிறது, ஒரு சில மாநிலங்களில் குறைவாக இருக்கிறது. ஆதலால், மாநில வாரிய ஆலோசிக்க ரிசர்வ் வங்கி சார்பில் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு பணம் பகிர்ந்தளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
English Summary:There is no Money in ATMs: People in Many States are Wandering for Rupee.