விஜய், சமந்தா நடிப்பில் கடந்த வருடம் தீபாவளி தினத்தில் வெளியான ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் ‘கத்தி’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இந்நிலையில் ‘கத்தி’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்தது. இந்த படம் சிரஞ்சீவியின் 150வது படமாக அமையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த திரைப்படம் தெலுங்கில் மட்டுமின்றி தற்போது இந்தியிலும் ரீமேக் செய்யப்படவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

‘கத்தி’ திரைப்படத்தை தமிழில் பிரமாண்டமாக தயாரித்த லைகா நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் ‘கத்தி’ இந்தி ரீமேக்கை தயாரிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த ஜெகன் என்பவர் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘கஜினி’ இந்தி ரீமேக்கில் ஜெகனின் பங்கு மகத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

இருவேடங்களில் விஜய் நடித்த கேரக்டர்களில் பாலிவுட்டின் பிரபல நடிகர் அக்சயகுமார் நடிக்கவிருப்பதாகவும் சமந்தா கேரக்டரில் முன்னணி பாலிவுட் நடிகை ஒருவர் நடிக்கவிருப்பதாகவும், இந்த படம் குறித்த அதிகாரபூர்வத அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ‘கத்தி’ திரைப்படத்தின் அரசியல் மற்றும் சமூக அவலங்களை தோலுரித்து காட்டும் காட்சிகள் இந்தியா முழுவதற்கும் பொருந்தும் என்பதால் இந்தி ரீமேக்கிற்காக திரைக்கதையில் பெரிய மாற்றம் செய்யப்போவதில்லை என ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: A.R.Murugadoss is going to produce the remake of “Kathi” in Hindi.