சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தில் பயணிகளின் பாதுகாப்புக்காக 10 போலீஸார் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என ரயில்வே போலீஸ் எஸ்பி பொன்ராமு தெரிவித்துள்ளார்.
சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தில் உள்ள இந்திரா நகர் ரயில் நிலையத்தில் அண்மையில் மாணவி பீர்த்தியிடம், மொபைல் போன் பறிக்க முயன்றதால் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
இந்நிலையில், பறக்கும் ரயில் சேவை தடத்தில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் கூடுதலாக ஆட்களை நியமித்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த உள்ளது. இதற்காக 10 பேர் கொண்ட சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ரயில்வே போலீஸ் எஸ்பி பொன்ராமு கூறியதாவது: ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீஸார் சார்பில் கடற்கரை – வேளச்சேரி தடத்தில் எஸ்.ஐ. தலைமையில் 10 போலீஸார் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, கூட்ட நெரிசல் மிக்க நேரங்களிலும், இரவு நேரங்களிலும் ரயில்களில் ரோந்து பணி மேற்கொள்ளும்.
பயணியருக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரயில்வே தொடர்ந்து பணியாற்றி வருகிறது என அவர் கூறினார்.