bio-metricமத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஆதார் எண் அடையாள அட்டைக்காக மட்டுமின்றி பல்வேறு வகைகளில் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் மானியம், வங்கி கணக்குகள், வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்தல் போன்ற பல வழிகளில் ஆதார் அட்டை எண்ணை பயன்படுத்தி வரும் நிலையில் ரயில்வே துறையிலும் ஆதார் எண்ணை பயன்படுத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு “பயோ மெட்ரிக்’ (விரல் ரேகை) வருகைப் பதிவேடு முறை தெற்கு ரயில்வேயில் தற்போது அறிமுகம் செய்யப்படவுள்ளது.

“பயோமெட்ரிக்’ வருகைப் பதிவேடு முறை இந்திய ரயில்வேயின் நான்கு மண்டலங்களில் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தெற்கு ரயில்வேயிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த முறைக்கு தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், இது நடைமுறைக்கு வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. “பயோ மெட்ரிக்’ முறை மூலம் ரயில்வே தொழிலாளர்கள், ஊழியர்களைத் தண்டிக்கவும் வாய்ப்புள்ளதால் தொழிற்சங்க நிர்வாகிகள் அதை எதிர்ப்பதாக கூறப்படுகிறது.

இந்த “பயோ மெட்ரிக்’ அடையாள முறையை இந்தியன் ரயில்வேயில் உள்ள அலுவலகங்களிலும், முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் ரூ.4.4 கோடி செலவில் அறிமுகப்படுத்தவுள்ளது எந்தெந்த அலுவலகங்களில் இவற்றை அமல்படுத்துவது என்பது குறித்து மண்டல ரயில்வே முடிவு செய்யும். பின்னர் இந்த முறை, அனைத்து உற்பத்தி மையங்களுக்கும் படிப்படியாக நீட்டிக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்த முறையை நடைமுறைப்படுத்துவதால் நேரம் தவறாமையை ஒவ்வொரு ஊழியரும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய நிலை வரும். ஊழியர்கள் பலர் அலுவலகங்களுக்குத் தொடர்ந்து தாமதமாக வருவதை இந்த பயோமெட்ரி முறை மூலம் தவிர்க்கலாம்.

ரயில்வே அலுவலகங்களில், உயரதிகாரிகளில் இருந்து, சாதாரண ஊழியர்கள் வரை, வருகைப்பதிவு குறித்த விஷயத்தில், நேரம் தவறாமையை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். பணிக்கு வரும் ஊழியர்கள், அதிகாரிகள் குறித்த நேரத்திற்கு அலுவலகம் வருவதை, ரயில்வே அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஊழியர்களின் அன்றாட வருகைப் பதிவேட்டை, அனைவரும் காணும் வகையில், www.attendance.gov.in என்ற இணையதளமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் பயோ மெட்ரிக் முறையில் 1.30 லட்சம் ஊழியர்களின் வருகைப் பதிவேட்டு விவரங்களும் இடம் பெறும்.

இப்போதுள்ள நடைமுறைப்படி, மத்திய அரசு ஊழியர், ஒரு மாதத்துக்கு, இருமுறை மட்டும், அலுவலகத்துக்கு அதிகபட்சமாக ஒரு மணி நேரம் தாமதமாக வரலாம். இதற்கு மேல் தாமதமாக வந்தால், அந்த ஊழியருக்கு அளிக்கப்பட்டுள்ள விடுமுறையில், அரை நாள் கழிக்கப்படும். நியாயமான காரணங்களுக்காக தாமதமாக வர நேரிட்டால், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு சலுகை அளிக்கும் பொறுப்பு, அவர்களின் உயரதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

English Summary: Aadhaar Number based biometric logs on. The results of the Southern Railway