தமிழகத்தில் வரும் 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதால் அதற்கு முன்னர் தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்களை இணைக்கும் பணியை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. சென்னையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி சென்னை மாநகராட்சி துணையுடன் ஏற்கனவே பெரும்பகுதி முடிந்துவிட்ட நிலையில் விடுபட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மட்டும் சென்னை மாநகராட்சி இப்பணியை மேற்கொள்கிறது. இந்தப் பணியின் போது முகாம்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்றும் இந்தப் பணியை மேற்கொண்டனர். ஆனால், அலுவலர்கள் சென்றபோது வீட்டில் இல்லாதோர், வீடு மாறியவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படாமல் இருந்தன. இதனால், பணிகள் முழுமையாக முடிக்கப்படாத நிலை இருந்தது.

இந்த நிலையில், இது குறித்த ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது பல்வேறு அறிவுரைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன. குறிப்பாக விடுபட்டவர்களின் வீடுகளுக்கு வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மீண்டும் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஏற்கெனவே அதிகாரிகள் வந்த போது, வெளியூர் சென்றவர்களிடம் படிவத்தில் கையெழுத்தும், குடிபெயர்ந்தோர் குறித்த விவரங்களை அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்களிடமும் சேகரிக்க என்றும், இந்தப் பணிகளை முழுமையாக ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

English Summary : Intensive work taking place in Chennai to link Aadhar card with Voter list before August 31st.