தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் மற்றும் செல்போன் எண் இணைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், இதுவரை இவ்வெண்களை இணைக்காதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 5.62 கோடி பேர் வாக்காளர் பட்டியல்களில் பதிவு பெற்றுள்ளனர். 2.64 கோடி பேர்களின் ஆதார் எண்கள் வாக்காளர் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பதிவு அதிகாரியால் நிராகரிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் மேல் முறையீடு செய்யலாம். தேசிய அளவில் வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்துதல் மற்றும் விவர உறுதிப்படுத்துதல் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் ஆதார் எண் மற்றும் தொடர்பு விவரங்களை கணக்கெடுத்தனர். அப்போது விவரங்களை அளிக்க இயலாத வாக்காளர்கள் தற்போது அவ்விவரங்களை சமர்ப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகின்றது.
அதன்படி, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டின்படி ஆதார் எண் வழங்கப்பட்டுள்ள, ஆனால் முந்தைய கணக்கெடுப்பின்போதும் இதுவரையும் விவரங்களை வழங்க இயலாத வாக்காளர்களின் வீடுகளுக்கு வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வருவார்கள். அப்போது, வாக்காளர்கள் ஆதார் எண், செல்போன் போன்ற விவரங்களை அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary:Aadhar numbers in the voter list, a chance to re-connect