சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் பால் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் சென்னையில் பால் தட்டுப்பாடு அதிகரித்தது. தற்போது மழை ஓரளவு குறைந்துவிட்டதால் இன்று முதல் மீண்டும் அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் பால் உற்பத்தி தொடங்கும் என பால் வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா அறிவித்துள்ளார்.
தொடர் மழையால், அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பண்ணை வெள்ளத்தால் சூழப்பட்ட நிலையில், நேற்று அமைச்சர் ரமணா அவர்கள் இந்த பால் பண்ணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பால் பண்ணையில் நவம்பர் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் உற்பத்தி தொடங்கப்பட்டு, வழக்கம்போல் மீண்டும் பால் விநியோகம் நடைபெறும் என்று கூறினார்.
இந்த ஆய்வின்போது எம்எல்ஏ எஸ்.வேதாச்சலம், வணிக வரித் துறை ஆணையர் எஸ்.கே.பிரபாகர். ஆவின் நிர்வாக இயக்குநர் சுனீல்பாலீவால், கைத்தறித் துறை இயக்குநர் கே. லதா உள்ளிட்டோர் உடனிருந்தனர். பால் பண்ணையின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டதால், அம்பத்தூர் பால் பண்ணை வாயிலாக மத்திய சென்னைக்கு விநியோகம் செய்யும் 42 பகுதிகளுக்கு மாதவரம், சோழிங்கநல்லூர், காக்களூர், விழுப்புரம் ஆகியப் பால் பண்ணைகளிலிருந்து நுகர்வோருக்கு தடையின்றி பால் விநியோகம் செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
english summary-Aavin milk diary ambattur will work from today