இந்திய இளைஞர்களின் வழிகாட்டி நாயகனாக திகழ்ந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நேற்று முன் தினம் காலமானதை அடுத்து அவருடைய இறுதிச்சடங்கு நாளை 30ஆம் தேதி அவருடைய சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ளது. இதனை அடுத்து, தமிழக அரசு அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு நிறுவனங்களுக்கும் நாளை 30ஆம் தேதி ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை என அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக பொதுத் துறை நேற்று வெளியிட்டுள்ள அரசாணை ஒன்றில் கூறியிருப்பதாவது:
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஷில்லாங்கில் 27-ம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் அடக்கம் செய்யப்படும் 30-ம் தேதி பொது விடுமுறை அளிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி, 30-ம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் மறைவையொட்டி ஒரு வார காலத்துக்கு அதிமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக உலகம் புகழும் வகையில் பணியாற்றிய ‘பாரத ரத்னா’ டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மரணமடைந்த செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறேன். டாக்டர் கலாமின் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அஇஅதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வார காலத்துக்குள் ஒத்தி வைக்கப்படுகின்றன’ என்று கூறியுள்ளார்.
English Summary : Tamil Nadu announced government holiday on 30th July for Abdul Kalam.