முன்னாள் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் கடந்த 27ஆம் தேதி இந்திய மக்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு திடீரென மாரடைப்பால் மறைந்த நிலையில், அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நாளை இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. இந்த இறுதிச்சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதா உள்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் ராமேஸ்வரம் சென்று அப்துல்கால் அவர்களுக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்த விரும்பும் பொதுமக்களுக்காக சென்னையில் இருந்து இலவச பேருந்து சேவையை ராமேஸ்வரத்தைச் சேர்ந்த அப்துல் கனி என்ற சமூக ஆர்வலர் அறிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர் அப்துல் கனி இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ராமேஸ்வரத்துக்கு தான் ஏற்பாடு செய்துள்ள இலவச பேருந்து சேவை குறித்து தகவல்களை அறிவித்துள்ளார். அப்துல் கலாமுக்கு இறுதி அஞ்சலி செலுத்த விரும்புபவர்கள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இதற்காக பர்வீன் டிராவல்ஸ் நிறுவனம் 2 பேருந்துகளை அளிக்க முன்வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, “கலங்கரை விளக்கமாக இருந்த மாமனிதருக்கு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும். இப்போதைக்கு நிறைய பேர் எங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து வருகின்றனர். மக்களின் தேவைக்கு ஏற்ப அதிக பேருந்துகளை இயக்க தயாராக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார். இன்று காலை 10 மணி முதல் சென்னை கோயம்பேட்டில் இருந்து இந்த இலவச பேருந்து சேவை செயல்பட்டு வருவதாகவும், இந்த இலவசப் பேருந்தில் செல்பவர்கள் ராமேஸ்வரத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.

English Summary : Free Transport service from Koyambedu to Rameshwaram for people who wished to attend Abdul Kalam funeral.