தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.
இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை 2,915 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆகஸ்டில் 481, செப்டம்பரில் 572 என பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இம்மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு, டெங்குவின் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தேவையான இடங்களில் மருத்துவ முகாம் நடத்துமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திறந்தவெளியில் உள்ள சிமெண்ட் தொட்டி, தண்ணீர் தொட்டி, பிளாஸ்டிக் கப், தேங்காய் ஓடு, ஆட்டுக்கல், உடைந்த மண்பாண்டங்கள், டயர்கள் போன்றவற்றில் மழைநீர், தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே, அதுபோன்ற பொருட்கள் மற்றும் குவிந்து கிடக்கும் கட்டுமானப் பொருட்களை அகற்ற வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.