தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. இரு தரப்பினர்களும் தங்கள் அணிக்கு தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சரத்குமார் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.தாணு கூறியதாவது: நடிகர்களுக்குள் பிரிவினை ஏற்படாமல் இருக்க இரு அணிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கத்தில் தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம், பெப்சி உள்ளிட்ட தமிழ்த்திரையுலக கூட்டமைப்பு 2 நாட்களுக்கு முன் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதை நகையாடும் விதத்தில் பாண்டவர் அணி சார்பில் ஒரு கடிதத்தை தயாரிப்பாளர் சங்கத்துக்கு அனுப்பியுள்ளனர். இது ஆரோக்கியமானதாக இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக சரத்குமார் தலைமையிலான நடிகர் சங்கம் பல்வேறு படங்களின் வெளியீட்டின் போது பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைக்க பெரிய பங்களிப்பை அளித்துள்ளது. எனவே இந்த அணியை ஆதரிப்பதே சிறப்பாக இருக்கும் என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருக்கிறது’ என்று கூறினார்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் விஷால் கூறியபோது, “தயாரிப்பாளர் சங்கத்தின் சமரச முயற்சியை வரவேற்கிறேன். ஆனால், அதற்கான காலம் கடந்துவிட்டது. ஒய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடிகர் சங்கத் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. இச்சமயத்தில் சமரச முயற்சி பலன் தராது. ஆகையால், சமரச பேச்சுக்கு போகவில்லை. கடிதம் அனுப்பிவிட்டோம். நடிகர் சங்கத் தலைவராக இருந்த சரத்குமார் நிறைய நல்லது பண்ணியதால் ஆதரவு என்கிறார்கள். அந்த சாதனைகளைச் சொல்லி சரத்குமார் ஓட்டு கேட்க வேண்டியது தானே? சமரச முயற்சி மூலமாக சரத்குமார் அணிக்கு நடிகர் சங்கத்தை தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்களா?
தேர்தல் வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறது. எங்கள் அணி கண்டிப்பாக வெற்றி பெற்றே தீரும். முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சமரச பேச்சுக்கு அழைத்தால் கூட நான் போக மாட்டேன் என்று சொன்னதாக பொய் தகவல் பரப்புகிறார்கள். முதல்வர் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். ஜாதி, மொழி, இனப் பிரச்சினையால் நடிகர் சங்கத்தை உடைக்க முடியாது. நடிகர் சிம்பு மற்றும் ராதிகா எவ்வளவு திட்டினாலும் எந்த பதிலும் சொல்ல மாட்டேன்” என்று கூறினார்.
இதனிடையே தன் மீது ஆதாரங்கள் இல்லாத குற்றச்சாட்டுக்களை விஷால் கூறி வருவதாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரத்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் விஷால் தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் தொடர்ந்து மிரட்டல்கள் வருவதால் பாதுகாப்பு வேண்டும் என காவல்துறையிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary:Actor Association Election: Producers Association supported Sarath team.