புதுடில்லி: செம பாதுகாப்பு… விமான நிலையம் போல் ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடைமுறைகளை போல், ரயில் நிலையங்களிலும் மேற்கொள்ள ரயில்வே அமைச்சகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல் அருண் குமார் கூறியதாவது:
ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறையின் கீழ், நாட்டில் உள்ள 202 முக்கிய ரயில்நிலையங்களில் பாதுகாப்பை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ரூ.385.06 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தில், ரயில் நிலையங்களின் நுழைவு வாயில்களில், சிசிடிவி கேமராக்கள், வெடிகுண்டு தடுப்பு சாதனங்கள், ஸ்கேன் கருவிகள், தேடப்படும் குற்றவாளிகளை கண்டறிவதற்கான சாதனங்கள் பொருத்தப்படும்.
ரயில் நிலையங்களில் தேவையற்ற நுழைவு வாயில்கள் நிரந்தரமாக மூடப்படும். மற்ற பகுதிகளில் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்படுவார். நுழைவு வாயில்களில் பல கட்ட சோதனைகளுக்கு பிறகே பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ரயில் பயணிகள், ரயில் கிளம்பும் 15 – 20 நிமிடங்களுக்கு முன்னரே வர வேண்டும்.
விமான நிலையங்களை போல் ஒரு சிலமணி நேரத்திற்கு முன்னர் வர தேவையில்லை. தற்போது சோதனை முயற்சியாக உ.பி.,யில் உள்ள பிரயாக்ராஜ் மற்றும் கர்நாடக மாநிலத்தில் ஹூப்ளி ரயில் நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 202 ரயில் நிலையங்களில் இதனை செயல்படுத்துவதற்கான விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.