சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்துடன் முடிவடையும். அந்த வகையில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் நிறைவடைந்து உள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தின் இறுதியிலேயே பனிக்காலம் தொடங்கிவிடும். அந்த வகையில் டிசம்பர் மாதத்தின் இடையிலே பனியின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரத்துக்கு மேல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு அதிகளவில் காணப்பட்டு வருகிறது.

நகரப்பகுதிகளில் இருப்பவர்களுக்கு ஏதோ மலைப்பகுதியில் வசிப்பது போன்ற உணர்வை தரும் வகையில் அதிகாலையில் பனிமூட்டங்களை பார்க்க முடிகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பனிப்பொழிவு அதிகமாகவே காணப்படுகிறது.

பனிப்பொழிவுக்கான காரணம் என்ன? என்பது குறித்தும், இன்னும் எத்தனை நாட்களுக்கு பனிப்பொழிவு காணப்படும் என்பது குறித்தும் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது, நமக்கு இது பனிப்பொழிவு காலம் தான். ஆனால் தற்போது மேகக்கூட்டங்கள் குறைவாக இருப்பதால், பூமியின் வெப்பம் தணிந்து காணப்படுகிறது. அதோடு கூட, இந்த நேரம் நமக்கு வடக்கில் இருந்து வரும் குளிர்ந்த காற்றுடன், கிழக்கு திசை காற்றும் சேர்ந்து வீசுவதால் கடும் பனிப்பொழிவுக்கான சூழல் காணப்படுகிறது.

இன்னும் 10 நாட்களுக்கு இந்த பனிப்பொழிவு இருக்கும். அதன் பிறகு, வழக்கமான கால சூழ்நிலையை நாம் உணரலாம். மழைக்கான வாய்ப்பு துளி அளவும் கூட இல்லை. அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *