தயாரிப்பாளர் சங்கம் சார்பிலான இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி தொடரப்பட்ட வழகில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
நிகழ்ச்சி நடத்த செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்றும், பாராட்டு விழா எனக் கூறிவிட்டு, நிதி திரட்டும் நிகழ்ச்சியாக நடத்தப்படுவதாகவும் மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர். 7 கோடி ரூபாய் நிதி திரட்டுவதாக கூறப்பட்டுள்ளதாகவும், அது நஷ்டத்தில் தான் முடியும் என்றும் கூறியிருந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடு தொடர்பான ஒப்பந்தத்தில் எவ்வளவு தொகை எனக் கூறப்படவில்லை என்றும் எனவே மேற்பார்வையிட நீதிபதி தலைமையில் குழு அமைக்கவும் கோரியிருந்தனர்.
விசாரணையின் போது விஷால் தரப்பில் நிகழ்ச்சி தொடர்பான ஒப்பந்தங்கள் தாக்கல் செய்யப்பட்டன. தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க நிதி திரட்டவே இளையராஜா நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும், அனைத்து உறுப்பினர்களையும் கலந்தாலோசித்தே முடிவெடுக்கப்பட்டதாகவும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஒய்.எம்.சி.ஏ.வுக்கு 35 லட்சம் ரூபாயும், இளையராஜாவுக்கு 25 லட்சம் ரூபாயும் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. 2017 – 18-ஆம் ஆண்டு கணக்கு வழக்குகள் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.