மருத்துவ படிப்புக்கு மாணவர்களை சேர்க்க நுழைவுத்தேர்வு அவசியமா? இல்லையா? என்பது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் நேற்று உச்சநீதிமன்றம் இதுகுறித்து முக்கிய உத்தரவு ஒன்றை அறிவித்துள்ளது. அதில் மாநில அரசுகள் தனியாக நுழைவுத்தேர்வு நடத்த முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவபடிப்புக்களுக்கு மாணவர்களை சேர்க்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேசிய தகுதி நுழைவுத் தேர்வை (NEET) நடத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த 11ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி கூட்டமைப்புக்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நேற்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் இந்த கல்வி ஆண்டில் அதாவது 2016-2017ஆம் கல்வி ஆண்டில் மாநில அரசுகளும், தனியார் மருத்துவ கல்லூரிகளும் தனித்தனியே நுழைவுத் தேர்வை நடத்த அனுமதிக்கும் வகையில், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மாற்றங்கள் செய்யுமாறு உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு முறையிட்டது.
இது குறித்து பின்னர் விசாரிக்கப்படும் என்று கூறிய நீதிபதிகள், ஏற்கனவே அறிவித்தபடி மே 1-ந் தேதி, ஜூலை 24-ந் தேதி என இரு கட்டங்களாக பொது நுழைவுத்தேர்வை நடத்தி முடிக்குமாறு உத்தரவிட்டனர். அதன்படி சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) சார்பில் முதற்கட்ட நுழைவுத் தேர்வு கடந்த 1-ந் தேதி நடத்தி முடிக்கப்பட்டது.
இந்த பொது நுழைவுத்தேர்வால் கிராமப்புற மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுவர் என்பதால் இதற்கு பதிலாக மாநிலங்களே சொந்தமாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதிக்கவேண்டும் என்றும், பொது நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்கவேண்டும் என்ற கோரிக்கையை காஷ்மீர், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, உத்தர பிரதேசம் உள்பட சில மாநிலங்களின் சார்பிலும் சில தனியார் மருத்துவ கல்லூரி அமைப்புகள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனில் ஆர்.தவே, சிவகீர்த்தி சிங், ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், மருத்துவ கவுன்சில் வக்கீல் விகாஸ் சிங், சி.பி.எஸ்.இ. சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், தனியார் கல்லூரிகள் சார்பாக ஆஜரான மூத்த வக்கீல் ராஜீவ் தவான், தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.பி.ராவ் ஆகியோர் வாதாடினர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தனியாக நுழைவுத்தேர்வு நடத்த தங்களை அனுமதிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் விடுத்த கோரிக்கையை நிராகரித்து மனுக்களை தள்ளுபடி செய்து இடைக்கால உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
* எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க மாநில அரசுகளோ அல்லது கல்லூரிகளோ தனியாக நுழைவுத்தேர்வு நடத்த முடியாது.
* அனைத்து மாநிலங்களும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வையே பின்பற்றி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
* மே 1-ந் தேதியன்று நடைபெற்ற நுழைவுத்தேர்வில் பங்கு கொள்ளாதவர்கள், 2-வது கட்டமாக நடைபெறும் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
அனுமதிக்கப்படுவார்கள்
* ஏற்கனவே மே 1-ந் தேதியன்று நடைபெற்ற தேசிய தகுதி நுழைவுத் தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் விரும்பினால், ஜூலை 24-ந் தேதியன்று நடைபெற இருக்கும் நுழைவுத் தேர்விலும் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். அப்படி அந்த தேர்வை எழுதும் போது, அவர்கள் ஏற்கனவே மே 1-ந் தேதியன்று எழுதிய தேர்வின் மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
* தேவைப்பட்டால் மத்திய அரசும், சி.பி.எஸ்.இ.யும் 2-வது கட்ட நுழைவுத்தேர்வு தேதியை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
இடஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்படாது
* இந்த உத்தரவின் மூலம் இடஒதுக்கீடு முறையில் எந்த மாற்றமும் ஏற்படாது.
மேலும் தேர்வு முறையின் நம்பகத் தன்மையை உறுதி செய்யும் வகையில், சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அமைத்த முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மேற்பார்வை குழுவின் கண்காணிப்பில் இந்த தேசிய பொதுநுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் இடைக்கால உத்தரவில் கூறி உள்ளனர்.
English Summary: Admission to medical Course. The Supreme Court dismissed the petition, including the states of Tamil Nadu.