centralgovernment10516பள்ளி மாணவர்களின் முக்கிய தேவைகளில் ஒன்றாகிய ஜாதிச்சான்றிதழ் பெற இதுவரை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அரசு அலுவலகங்களில் அலைந்து திரிந்து பெற்று வந்த நிலையில் இனிமேல் இந்த சான்றிதழ்களை அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பள்ளி மாணவர்கள் 5 அல்லது 8ஆம் வகுப்பு பயிலும்போதே அவர்களுக்கு சாதி மற்றும் பிறப்பிட சான்றிதழ்கள் அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே வழங்கப்படும் என்றும் இதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

“சாதி சான்றிதழ்கள் மற்றும் பிறப்பிட சான்றிதழ்களை அரசு அலுவலகங்களில் வாங்குவதற்கு பொதுமக்கள் மிகவும் அலைகழிக்கப்படுவதாகவும், இந்த சான்றிதழ்களை பெற சம்பந்தப்பட்ட அலுவலர்களில் பெரும்பாலானோருக்கு லஞ்சம் கொடுப்பது என்பது நடைமுறை ஆகிவிட்டதாக ஏகப்பட்ட புகார்கள் வந்ததை தொடர்ந்தே மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த சான்றிதழ்கள் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வாங்குவதற்கு மிகவும் அவசியம் என்பதால் வேறு வழியின்றி இதுவரை லஞ்சம் கொடுத்து மாணவர்கள் பெற்று வந்தனர்.

வழக்கமாக ஒரு மாணவனுக்கு சாதி மற்றும் பிறப்பிட சான்றிதழ்களை மாநில அல்லது யூனியன் பிரதேச அரசுகள்தான் வழங்கும். ஆனால் மத்திய அரசு தற்போது அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பி உள்ள அறிவுறுத்தல் ஒன்றில் ” இனிமேல் பள்ளியின் முதல்வர் அல்லது தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவர்களிடமிருந்து சான்றிதழுக்கு தேவையான ஆவணங்களை பெற்று, அவற்றை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து வேண்டிய சான்றிதழ்களை கோர வேண்டும். சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும் அந்த ஆவணங்களை ஆய்வு செய்து, உரிய சான்றிதழ்களை 30 முதல் 60 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

English Summary: Community Certificate in School’s.Central Government New Announcement.