தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து அனுமதி இல்லாத சுவர்களில் அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்யக்கூடாது, அனுமதி இன்றி கட்சிகளின் பேனர்கள் வைக்கக்கூடாது உள்ளிட்ட பல விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த விதிமுறைகளை தேர்தல் ஆணையமே மீறுவதாக விளம்பர நிறுவனங்கள் குற்றஞ்சாட்டி வருகின்றன. அரசு பேருந்துகளில் பல விளம்பர நிறுவனங்கள் முறையான அனுமதி பெற்று தங்கள் வாடிக்கையாளர்களின் விளம்பரத்தை வைத்துள்ளன. ஆனால் அந்த விளம்பரத்தின் மீதே தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேர்தலில் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்த போஸ்டர்களை ஒட்டி ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள விளம்பரத்தை மறைத்து வருவதாகவும், இதனால் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விளம்பர நிறுவனங்கள் கூறி வருகின்றன. இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து செல்லவுள்ளதாக விளம்பர நிறுவனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசுப் பேருந்துகளில் விளம்பரம் செய்வதற்காக ஒப்பந்தம் எடுத்துள்ளவர்களிடம் அனுமதி பெறாமல், வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விளம்பரங்களை தேர்தல் ஆணையம் ஒட்டி வருவதாகவும், இந்த விளம்பரம் அவசியமானது என்ற போதிலும் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள விளம்பரத்தின் மீது ஒட்டி அந்த விளம்பரத்தை மறைப்பது எந்த வகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதனால் விழிப்புணர்வு ஏற்படுவது ஒருபுறமிருக்க, அரசுப் பேருந்துகளில் விளம்பரம் செய்ய ஒப்பந்தம் எடுத்தர்களிடம் அனுமதி பெறாமல் தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்து வருவதால் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்ட மடைந்து வருவதாக விளம்பர நிறுவனத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.
சென்னையைச் சேர்ந்த தனியார் விளம்பர நிறுவனத்தினர் கூறியதாவது: கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 2000 அரசுப் பேருந்துகளில் விளம்பரம் செய்ய 3 வருட ஒப்பந்தம் செய்துள்ளோம். இதற்காக ரூ.1 கோடி முன்பணமாகவும், மாதம் தோறும் ரூ.25 லட்சமும் செலுத்தி வருகிறோம். விளம்பரம் செய்ய வேண்டுவோர், எங்கள் மூலம் பேருந்துகளில் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
பேருந்துகளின் பின்புறம் இந்த விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுவதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் எங்களிடம் எந்தவொரு முன் அனுமதியும் பெறாமல், தன்னிச்சையாக, சில பேருந்துகளில் தேர்தல் விளம்பரங்களை ஒட்டி வருகின்றனர். இதனால் எங்களது வாடிக் கையாளர்களின் விளம்பரங்களை ஒட்ட முடியவில்லை. பல லட்சம் ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளோம்.
தேர்தல் விழிப்புணர்வு விளம்பரங்கள் ஸ்டிக்கர் வடிவில் இருப்பதால், அதை சீரமைத்த பிறகே நாங்கள் விளம்பரங்களை வைக்க முடியும். அதற்கும் தனியே செலவாகும். எனவே இதை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
இதேபோல மதுரையில், அங்குள்ள ஒரு நிறுவனம் அரசுப் பேருந்துகளில் விளம்பரம் மேற்கொள்ள ஒப்பந்தம் எடுத்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பே அங்கும் முன் அனுமதி பெறாமல், பேருந்துகளில் தேர்தல் விழிப்புணர்வு விளம்பரங்கள் ஒட்டப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் கூறும்போது, ‘அனைத்து பேருந்துகளிலும் இந்த விளம்பரங்கள் ஒட்டப்படவில்லை. வாக்குகள் குறைவாக பதிவாகும் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளில் மட்டுமே ஒட்டப்பட்டுள்ளன. அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் யாரும் இந்த பிரச்சி னையை எனது கவனத்துக்கு கொண்டு வரவில்லை. உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார்.
English Summary : Advertising agencies concerned on Tamil Nadu State Election commission breaking Election rules.