ரயில்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களின் நலனை முன்னிட்டு அவர்களுக்காக ஒதுக்கப்படும் லோயர்பெர்த்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு என்றே ஒதுக்கப்படும் சீட்களின் எண்ணிக்கை 50 – 60ல் இருந்து, தற்போது 80 – 90 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த வசதி வரும் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், கர்ப்பிணிகள் ஆகியோர்களுக்கு ஒவ்வொரு ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டியிலும், ஆறு லோயர் பெர்த்கள் ஒதுக்கப்படும். தற்போது நான்கு பெர்த்கள் ஒதுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, 2-ம் ஏசி மற்றும் 3 ஏசி வகுப்புகளில் மூத்த குடிமக்களுக்காக மூன்று லோயர் பெர்த்கள் ஒதுக்கப்படும். ராஜதானி, துரந்தோ உள்ளிட்ட முழுக்க ஏசி வசதி செய்யப்பட்ட எக்ஸபிரஸ் ரயில்களில் 3 ஏசி வகுப்பில் பயணிக்கும் மூத்த பயணிகளுக்கு, நான்கு லோயர் பெர்த்கள் ஒதுக்கப்படும். அதே நேரம், சாதாரண மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் இருக்கும் 3 ஏசி வகுப்புக்கு மூன்று லோயர் பெர்த்கள் ஒதுக்கப்படும். ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பாபு, 2016 – 17க்கான பட்ஜெட்டைக் கடந்த மார்ச் மாதம் சமர்ப்பித்தபோது, இந்த திட்டத்தை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய அரசு சரக்குகளின் கட்டணத்தை வெகுவாகக் குறைத்திருக்கிறது. இது குறித்துப் பேசிய ரயில்வே குழு உறுப்பினர் (போக்குவரத்து) மொஹம்மது ஜாம்ஷெட், ‘ஏப்ரல் 1 முதல், ரூ, 63 ஆக இருக்கும் சரக்குகளின் ஒரு டன் விலை, ரூ.47 ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார். இது சாலை வழியாகக் கொண்டு செல்லப்படும் சரக்குக் கட்டணத்தை விட (1 டன் சரக்கு, 18 கி.மீ.க்கு ரூ.72) குறைவு. இந்த விலைக் குறைவால், ஏற்கனவே கொண்டு செல்லப்படும் சரக்குகளை விட, 5 மில்லியன் டன் அதிக சரக்குகள் வரும்’ என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

English Summary : Lower berth quota for senior citizens from April 1.