கேரளாவில் கடந்த 2 வாரங் களாக பெய்த கனமழையால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களாக படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டன. நேற்று முதல் முழு அளவில் ரயில்கள் இயக்கப்பட்டன.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, “கேரளாவில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலக்காடு, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் ரயில்பாதைகள் நீரிழில் மூழ்கின. சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு, ரயில்பாதைகள் முற்றிலும் சேதமடைந்திருந்தன. இதனால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கேரளாவுக்கு இயக்க வேண்டிய 300-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. இதேபோல், 200-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டது. மேலும், 58 விரைவு ரயில்கள் மாற்றுப்பாதைகளில் இயக்கப்பட்டன.
ரயில்பாதைகள் சேதமடைந்த பகுதிகளை கண்டறிந்து உடனுக்குடன் பணிகள் மேற்கொள்ளப்பட் டன. தமிழக ரயில்வே அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் கொண்டு செல்லப்பட்டு பணிகள் விரைவுப்படுத்தப்பட்டன. இதற் கிடையே, கடந்த 7 நாட்களுக்கு பிறகு கேரளாவுக்கு தமிழகத்தில் இருந்து மீண்டும் வழக்கம்போல் முழு அளவில் ரயில்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன” என்றார்.