‘கனா’ படத்தில் ஒரு பாடலை சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடியுள்ளார்.

சிவகார்த்திகேயன் ‘கனா’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். அவருடைய கல்லூரித் தோழரும், நடிகர், பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகங்கள் கொண்டவருமான அருண்ராஜா காமராஜ், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டராக ஆக விரும்பும் மகளுக்கும், அதற்கு ஆதரவாக இருக்கும் தந்தைக்கும் இடையிலான சம்பவங்கள்தான் படத்தின் கதை. அப்பாவாக சத்யராஜும், மகளாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயனின் இன்னொரு கல்லூரித் தோழரான திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். இவர் ஏற்கெனவே ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியான ‘மரகத நாணயம்’ படத்துக்கு இசையமைத்துள்ளார். மோகன்ராஜன், ஜிகேபி, ராபிட் மேக், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இந்தப் படத்தின் இசை உரிமையை சோனி மியூஸிக் நிறுவனம் வாங்கியுள்ளது.

பி.தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குநராக லால்குடி என்.இளையராஜா பணியாற்றுகிறார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து கலையரசு என்பவர் படத்தைத் தயாரித்து வருகிறார். ‘கனா’ என்பதற்கு கீழே ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என டேக்லைன் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் அனைத்து படப்பிடிப்புப் பணிகளும் முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 23-ம் தேதி ’கனா’ படத்தின் இசை மற்றும் டீஸரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ‘கனா’படத்தின் இசையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வெளியிடுகிறார்.

இந்நிலையில் கனா படத்தில் ஒரு பாடலை சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள அன்பை, பாசத்தைப் பதிவு செய்யும் விதமாக வாயாடி பெத்த புள்ள என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. அதை ஆராதனா பாடியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *