வாக்காளர்களிடம் தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பேஸ்புக்குடன் இணைந்து பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
தொழில்நுட்ப விஷயங்களில் தமிழகம் நாட்டிலேயே முன்னிலையில் உள்ளது. எனவே அதை பயன்படுத்திக்கொள்ளும் விதமாக பேஸ்புக் நிறுவனத்துடன் இந்திய தேர்தல் ஆணையம் ஓர் ஒப்பந்தத்தை செய்துள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பொதுக் கொள்கை இயக்குநர் ஆங்கி தாஸுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம். அதன்படி பேஸ்புக்குடன் இணைந்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ள 5 கோடியே 79 லட்சம் வாக்காளர்களில் ஒரு கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் பேஸ்புக் கணக்கில் உள்ளனர்.
வரும் மே 15, 16-ம் தேதிகளில் பேஸ்புக்குக்குள் நுழைந்ததும் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்ற நினைவூட்டல் வாசகம் வரும். இந்த 2 நாட்களிலும் நமக்காக பேஸ்புக் இலவசமாக இந்த சேவையை செய்யவுள்ளது. பேஸ்புக்கில் தரப்படும் இணைப்பின் மூலம் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையும் பயன்படுத்த முடியும். மேலும், பத்திரிகையாளர் சந்திப்பு, தேர்தல் முடிவுகள் அறிவிப்பு ஆகியவற்றையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய முடியும்.
இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.
தேர்தல் ஆணையத்தின் இந்த புதிய முயற்சி குறித்து பேஸ்புக் நிறுவனத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பொதுக் கொள்கை இயக்குநர் ஆங்கி தாஸ் கூறியபோது, ‘இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்படுவது சந்தோஷமாக உள்ளது. வாக்குப்பதிவு செய்யுங்கள் என்ற நினைவூட்டல் வாசகங்களை அனுப்புவது மட்டுமல்லாமல் பல தகவல்களுடன் கூடிய இணைப்பையும் [லிங்க்] கொடுப்போம். தற்போதுள்ள இந்த ஒப்பந்தம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை தேர்தல் ஆணையம் எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று கூறினார்.
English Summary: Agreement on the election awareness with Facebook. Rajesh lakkani Information.