இங்கிலாந்து அணியின் முன்னணி தொடக்க வீரர் அலஸ்டைர் குக். 33 வயதாகும் இவர், கடந்த 2006-ம் ஆண்டு தனது 21 வயதில் இந்தியாவிற்கு எதிரான நாக்பூர் டெஸ்டில் அறிமுகமானார். அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்து அசத்தினார்.
டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அலஸ்டைர் குக் இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் பொறுப்பேற்றார். இவர் இதுவரை 160 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 சதங்கள், 56 அரைசதங்களுடன் 12254 ரன்கள் குவித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் சாதனையை இவரால் முறியடிக்க முடியும் என்ற ஒரு பார்வை இருந்தது.
ஆனால் கடந்த ஒரு வருடமாக இவரது ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. தற்போது நடைபெற்று வரும் இந்தியாவிற்கு எதிரான முதல் நான்கு டெஸ்டிலும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் வருகிற 7-ந்தேதி லண்டன், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் போட்டியோடு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையோடு அலஸ்டைர் குக் விடைபெறுகிறார்.
குக் 92 ஒருநாள் மற்றும் நான்கு டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டியில் 5 சதங்களுடன் 3204 ரன்கள் அடித்துள்ளார். டி20 போட்டியில் 61 ரன்கள் அடித்துள்ளார்.