சென்னை: மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தில் கீழ் மாற்றுத்திறன் மகளிருக்கான மானியத்தை உயர்த்தி புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை துவக்கியது. இத்திட்டத்தின்படி ஸ்கூட்டர் ஒன்றுக்கு அதிகபட்சமாக 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.25,000 வழங்குவதாக அறிவித்து பொதுவாக அரசாணை வெளியிட்டது.

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016-ன்படி மத்திய, மாநில அரசுகள் எந்த ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டம் தீட்டினாலும், மாற்றுத்திறனாளிகளுக்கென தனியாக கூடுதலாக 25 சதவீதம் ஒதுக்கீடுகளை செய்ய வேண்டும். ஆனால், மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக மானியம் வழங்கப்படவில்லை.

இது குறித்து தமிழக முதலமைச்சர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உயர் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மனுக்கள் அனுப்பி முறையீடு செய்தும் பயன் இல்லாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, இந்த வழக்கை கடந்த பிப்ரவரி மாதம் விசாரித்த நீதிமன்றம், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் அளித்துள்ள மனுக்கள் மீது 6 வார காலத்திற்குள் உரிய முடிவுகளை எடுக்க தமிழக அரசின் ஊரகவளர்ச்சித்துறை செயலளருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு 6 மாத காலமாகியும் ஊரகவளர்ச்சித்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் 27-ம் தேதியிட்ட ஊரகவளர்ச்சித்துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம் வாங்க விரும்பும் தகுதியுள்ள மாற்றுத்திறன் மகளிருக்கு, மற்றவர்களுக்கு வழங்கப்படும் மானியத்தைவிட கூடுதலாக 25 சதவீதம் உயர்த்தி அதாவது ரூ.31,250 வரை மானியம் வழங்குவதாக உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை செயலாளரான ஹன்ஸ்ராஜ் வர்மா இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *