மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு உதவிடும் வகையில், அம்மா சமுதாய வானொலி சேவையை முதல்வர் கே. பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இதற்கான நிகழ்ச்சி சென்னையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் சார்பில், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், மக்கள் நலத் திட்டங்கள், மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்கள், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச் சத்து திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டங்கள் குறித்த தகவல்களை மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள அம்மா சமுதாய வானொலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சேவையைப் பெற, மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் தங்களது செல்லிடப்பேசி எண்களைப் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு பதிவு செய்த எண்கள் மூலமாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்களது செல்லிடப்பேசிகளில் இ-மதி செயலியைப் பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக அம்மா சமுதாய வானொலி சேவை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.