சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வில் மாணவ, மாணவிகள் ரேங்க் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஸ்ரீசாய்ராம், எஸ்.எஸ்.என். மற்றும் பனிமலர் ஆகிய கல்லூரிகள் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. இதில், ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி ஏற்கனவே கடந்த இரண்டு வருடங்களாக முதலிடத்தை பெற்றுள்ளது என்பதும் இம்முறை 3-வது ஆண்டாகவும் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழகம் ஏப்ரல் 2015-ம் ஆண்டுக்கான தேர்வில் பிஇ, பிடெக், எம்பிஏ, எம்இ உள்ளிட்ட பாடப் பிரிவில் தமிழகம் முழுவதும் உள்ள 570 உறுப்புக் கல்லூரிகளில் பாடவாரியாக தேர்வு எழுதிய மாணவர்களின் ரேங்க் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், ஸ்ரீ சாய் ராம் கல்லூரி மாணவர்கள் 170 பேர் பல்கலைக்கழக ரேங்க் எடுத்து முதல் இடத்தையும், எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 166 பேர் பல்கலைக்கழக ரேங்க் எடுத்து 2-ம் இடத்தையும், பனிமலர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 144 பேர் பல்கலைக்கழக ரேங்க் எடுத்து 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 108 பேர் பல்கலைக்கழக ரேங்க் எடுத்து 4-ம் இடத்தையும், ஆர்எம்கே பொறியியல் கல்லூரி மாணவர்கள் 101 பேர் பல்கலைக்கழக ரேங்க் எடுத்து 5-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
மேலும் ராஜலஷ்மி பொறியியல் கல்லூரி 6வது இடத்தையும், வேலம்மாள் பொறியியல் கல்லூரி 7வது இடத்தையும், ஜேப்பியார் பொறியியல் கல்லூரி 8வது இடத்தையும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி 9வது இடத்தையும், ஆர்எம்டி பொறியியல் கல்லூரி 10வது இடத்தையும் பிடித்துள்ளது.
முதலிடம் பிடித்துள்ள ஸ்ரீசாய்ராம் கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்கள் கல்லூரி கடந்த மூன்று ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழக தேர்வில் முதலிடத்தைப் பிடித்து வருகிறது. இதேபோல், இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கன்ட்ரோல் இன்ஜினீயரிங் பாடத் தில் கடந்த 3 ஆண்டுகளாக எங்கள் கல்லூரி மாணவர்கள் தங்கப் பதக்கத்தை பெற்று வருகின்றனர். அதேபோல், இந்த ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பாடத்திலும் எங்கள் கல்லூரி மாணவர்கள் தங்கப் பதக்கம் பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு மாணவரின் படிப்பிலும் சிறப்பு கவனம் செலுத்துவதுடன் அவர்களுக்கு உரிய பயிற்சிகளை அளிக்கும் வகையிலும் ஆசிரியர்கள் திறம்பட செயல்படுகின்றனர்.. மேலும், மாணவர்களின் விடாமுயற்சி உள்ளிட்ட காரணங்களால்தான் எங்கள் கல்லூரி மூன்றாவது ஆண்டாக தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
English summary-Anna university rank list released