தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:
பிளஸ் 2 துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும், ஏற்கெனவே விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களும் தொடக்கக்கல்வி பட்டயப் படிப்புக்கு (இடைநிலை ஆசிரியர் பயிற்சி) விண்ணப்பிக்கும் வகையில் 2-வது கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 7ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு நாளை முதல் அதாவது 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும்.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் (டயட்) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.500 (எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250) விண்ணப்பக் கட்டணத்தை ரொக்கமாகச் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை விண்ணப்பம் வாங்கிய மையத்தில் ஜூலை 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் வழியிலான கலந்தாய்வு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும். கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் தனியே அனுப்பப்பட மாட்டாது. எனவே, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வு விண்ணப்பம் ஒப்படைத்த மையத்தில் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு ராமேஸ்வர முருகன் கூறியுள்ளார்.
English Summary:August 7 Secondary teacher training,Phase 2 Consulting