தமிழக சட்டமன்றபொதுத் தேர்தல் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்துவது, வாக்குப்பதிவை 100 சதவீதமாக அதிகரிப்பது ஆகிய இரண்டு முழக்கங்களோடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகமும் தொடர்ந்து செய்து வருகிறது.
இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிப்பதன் அவசியத்தை உணரும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் வாக்குப்பதிவு அவசியம் குறித்த விளக்கங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் சென்னை மாநகரம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் வீடியோ குறும்படங்கள் பொதுமக்களுக்கு திரையிடப்பட்டு வருகிறது.
விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக சென்னை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த நியூ கல்லூரி, ஏ.எம்.ஜெயின் கல்லூரி, ராணிமேரி கல்லூரி, எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி, மாநிலக் கல்லூரி, வேல்டெக் கல்லூரி, ஏ.எஸ்.ஏ.என் கல்லூரி, முகம்மது சதக் பொறியியல் கல்லூரி, செவாலியர் தி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி, யூ.சி.ஏ. பாரா மெடிக்கல் கல்லூரி, ஆல்பா கல்லூரி ஆகிய 11 கல்லூரிகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், தொண்டு நிறுவனத்தினர், மாநகராட்சி பணியாளர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், 1,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி நிகழ்ச்சி நேற்று விவேகானந்தர் பண்பாட்டு கலை மன்றம் எதிரில் துவங்கி, கடற்கரை சாலையில் உழைப்பாளர் சிலை வரை வந்தடைந்தது. இந்த பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான சந்தரமோகன் கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் நடந்து வந்தார். பின்னர், மெரீனா நீச்சல் குளம் அருகில் இருந்து சென்னை பல்கலைக்கழகம் வரை மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.
English Summary: Awareness in Marina for Increase a Voters.