actors-election-20102015தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தேர்தல் நடைபெற்று நாசர் தலைமையில் புதியநிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே பல்வேறு ஆக்கபூர்வமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தலுக்கு பின்னர் முதல் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. சென்னையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற இந்த 62வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டடத்தில், 2014-15-ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை, தணிக்கை செய்யப்பட்ட வரவு-செலவு கணக்கு ஆகியவற்றை துணைத்தலைவர் கருணாஸ் சமர்ப்பித்தார். சங்கத்தின் எதிர்கால பொருளாதார நலத் திட்டங்கள் குறித்தும் இந்த பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டது.

நடிகர் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடம் ஒன்றை கட்டுவது என்றும், அந்த கட்டிடத்தில் பிரம்மாண்ட அரங்குகள், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடம், நடனப் பயிற்சிக் கூடம் உள்ளிட்ட அம்சங்களுடன் ரூ.26 கோடியில் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டுவது குறித்து உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. கட்டடம் மூலமாக ஆண்டுக்கு ரூ.6 கோடியும், மாதத்துக்கு ரூ.56 லட்சமும் வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கட்டட மாதிரியை ஆருர் தாஸ், சிவகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.

நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால் பேசியபோது ‘நடிகர் சங்கத்திற்கு என கட்டப்படவுள்ள புதிய கட்டிடம் குறித்து விவரித்தார். புதிய கட்டிடத்தில் 1000 பேர் அமரும் வசதி கொண்ட ஆடிட்டோரியம், திருமண மண்டபங்கள், பிரிவியூ திரையரங்கம், சங்கத்தின் அலுவலகம், உடற்பயிற்சிக்கூடம், கார் பார்க்கிங் ஆகியவை கொண்ட கட்டிடமாக அமையும் என்றும் இதற்கு சுமார் ரூ.26 கோடி செலவாகும் என்றும் இந்த தொகையை ஸ்டார் கிரிக்கெட், திரைப்படம், தொலைக்காட்சி சீரியல் ஆகியவற்றின் மூலம் திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

பின்னர் பொருளாளர் கார்த்தி பேசியபோது, “இது கனவிலும் நினைத்துப் பார்க்காத மேடை இதை என் பெரிய குடும்பமாக உணர்கிறேன். இனி நாடக நடிகர்கள் எதற்கும் யாரிடமும் கையேந்த விட மாட்டோம். மருத்துவ, கல்வி, ஓய்வூதியத் திட்டங்கள் பலன் தரும். முந்தைய நிர்வாகம் செய்த குளறுபடிகள், தவறுகள் பற்றி புகார் செய்ய இருக்கிறோம்’ என்று கூறினார்.

இறுதியில் தலைவர் நாசர் பேசியபோது, ” இப்படி ஒரு பெரிய மாற்றத்துக்காக எங்கள் மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. நம்பிக்கையைவிட அன்பு காட்டியது அதிகம். அதற்கும் நன்றி. அவச்சொல். அவதூறு , வாக்குவாதம் இல்லாமல் நடக்கும் முதல் கூட்டம் இது. இப்படிக் கல்யாண வைபவம் போல ஒவ்வொரு கூட்டமும் கொண்டாட்டமாக நடக்கும். எங்களை நம்புங்கள் அனைவரும் இணைவோம். நல்லதே நடக்கும்’ என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 2000 நடிகர், நடிகையர் மற்றும் நாடக கலைஞர்களுக்கு நடிகை ஹன்சிகா தனது செலவில் உணவு வழங்கினார். அவருக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் அவர் ஸ்கைப் வழியாக தெரிவித்த வாழ்த்து செய்தியும் ஒளிபரப்பப்பட்டது.

English Summary: Actor Association’s 62nd anniversary.