பி.எட். என்று கூறப்படும் ஆசிரியர் கல்வியியல் பட்டப்படிப்பை பலர் கல்லூரிக்குச் செல்லாமலேயே ஒருசிலர் வெளிநாட்டில் இருந்து கொண்டே பெறுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளதாகவும், இதை தடுப்பதற்கும், தரமான ஆசிரியர்கள் உருவாகவும், சுயநிதி கல்லூரிகளில் தீவிர கண்காணிப்பை அமல்படுத்த வேண்டும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது 600-க்கும் அதிகமான ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 21 அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளைத் தவிர மற்ற அனைத்தும் சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் ஒருசிலர் கல்லூரிக்கே வராமலேயே பட்டம் பெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. கடந்த ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்திய திடீர் ஆய்வு ஒன்றில், வெளிநாட்டில் இருந்தபடி, இங்குள்ள சுயநிதி கல்லூரியில் மாணவர் ஒருவர் பி.எட். படித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது, நிகழாண்டில் படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்வதால் கல்லூரிக்கு வராமல் பட்டம் பெறுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது: சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். சேருபவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கல்விக் கட்டணமாக ரூ. 47,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல கல்லூரிகள் இந்தக் கட்டணத்தை ரூ. 65,000 ஆக வசூலித்து வருகின்றன. அதே நேரம், பல்வேறு காரணங்களால் கல்லூரிக்கு தினமும் வர முடியாது என்கிற நிலையில் உள்ள மாணவர்களுக்கு சில சுயநிதி கல்லூரிகள் சலுகைகளை அளித்து வருகின்றன. அதாவது ரூ. 10 ஆயிரம் கூடுதலாக அதாவது ரூ. 75,000 கல்விக் கட்டணத்தை செலுத்திவிட்டால் கல்லூரிக்கே வரத் தேவையில்லை என்றும் தேர்வு நேரத்துக்கு அல்லது கல்லூரி அழைக்கின்றபோது வந்தால் போதும் என்ற நிலை வெளிப்படையாகவே நடைபெற்று வருகிறது.
இப்போது பி.எட். படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுவதால், இந்த நிலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, தமிழக அரசும், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமும் தீவிர கண்காணிப்பை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் தரமான ஆசிரியர்கள் உருவாக வாய்ப்பு அமையும்’ என்று கூறினார்
இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் கூறியதாவது: சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் சிலவற்றில், இதுபோல் மாணவர்கள் கல்லூரிக்கே வராமல் பி.எட். படிப்பை மேற்கொள்வது உண்மைதான். இதைக் கட்டுப்படுத்த புதிய நடைமுறையை பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது. அதாவது, அனைத்து கல்லூரிகளும் மாணவர் தினசரி வருகைப் பதிவேட்டை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என உத்தரவிட்டோம். அதனடிப்படையில் இங்கொன்றும், அங்கொன்றுமாக ஏதாவது ஒரு கல்லூரியை தெரிவு செய்து பல்கலைக்கழக அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கை மூலம் பல கல்லூரிகள் பிடிபட்டன. சென்னைக்கு அருகே உள்ள ஒரு கல்லூரியில் மாணவர் ஒருவர் வெளிநாட்டில் இருந்தபடி பி.எட். படித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2014-ஆம் ஆண்டில் மட்டும் 15 கல்லூரிகள் இந்த சர்ச்சையில் சிக்கின. அந்தக் கல்லூரிகள் மீது பல்கலைக்கழகமும், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலும் (என்சிடிஇ) நடவடிக்கை மேற்கொண்டது. இந்த திடீர் ஆய்வு, தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க முடியும்’ என்று கூறினார்.
English Summary:B.Ed Students while Studying in abroad. Educators Worry.