ESI hospitalsதமிழகத்தில் தற்போது நல்ல முறையில் செயல்பட்டு வரும் 214 இ.எஸ்.ஐ. மருந்தகங்களை,  மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறையின் மத்திய இணையமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா நேற்று சென்னையில் தெரிவித்தார்.

சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையின் செயல்பாடுகள், புதிய கட்டடங்களின் கட்டுமானப் பணிகள், சிகிச்சை உள்ளிட்டவற்றை மத்திய இணையமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, “இந்தியா முழுவதும் 40 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் இருப்பதாகவும், அமைப்பு சாரா தொழிலாளர்களையும் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் சேர்ப்பதற்கான “ஸ்மார்ட் கார்டு’ வழங்கும் திட்டம் தொடங்கவுள்ளதாகவும் கூறினார். இத்திட்டத்தை 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்க உள்ளதாகவும், அதனை தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக “ஸ்மார்ட் கார்டு’ வழங்கும் பணிகள் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

மேலும் அமைச்சர் கூறியதாவது: இப்போது 44 தொழிலாளர் நலச் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அவற்றை எளிமைப்படுத்தி, தொழிலாளர் ஊதியங்கள், தொழிற்சாலை உறவு, தொழிலாளர் பாதுகாப்பு, பணியாற்றும் சூழ்நிலை என்ற நான்கு அம்சங்களின் கீழ் வரையறுக்க உள்ளோம். இதற்கான சட்டத் திருத்தங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் செயல்பட்டு வரும் 214 இ.எஸ்.ஐ. மருந்தகங்களை ஆறு படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்த உள்ளோம். சென்னை கே.கே.நகர் மருத்துவமனை உள்பட நாடு முழுவதிலும் உள்ள பெரிய இஎஸ்ஐ மருத்துவமனைகளில் ரத்த சுத்திகரிப்பு, எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சிடி ஸ்கேன் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும் எந்தெந்த மருத்துவமனைகளில் இடவசதியும், உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளதோ, அவை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளாக மாற்றப்படும்.

இஎஸ்ஐ மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளில் வெள்ளை நிற படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் பயன்படுத்தப்படுகின்றன. மருத்துவமனைகளின் சுகாதாரத்தை மேலும் மேம்படுத்தும் வண்ணம் வானவில் போன்று ஏழு நாள்களும் ஏழு நிறமான படுக்கை விரிப்புகள், தலையணை உறைகளை மாற்றும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அதிலுள்ள 80 இடங்கள் மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கோவை இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் பெரும்பாலான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இக்கல்லூரி ஏற்கெனவே மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மீதம் உள்ள கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பின்பு மத்திய, மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும். அதன் பின்பு கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த பேட்டியின்போது கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஸ்ரீகுமாரி தாமோதரம் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

English Summary:7 days in 7 Colors Bed Sheets in ESI Hospitals.Minister Information.