ricefestivalஇந்தியா ஒரு விவசாய நாடு. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நெல் விளைச்சல் அதிகமாக செய்யப்பட்டு வருகிறது. நெல் விளைச்சலை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் பாரம்பரிய நெல் வகைகளின் பயன்கள் குறித்தும் அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்தும் பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு செப்டம்பர் 26ஆம் தேதி அதாவது வரும் சனிக்கிழமை சென்னையில் பாரம்பரிய நெல் வகைகள் திருவிழா நடைபெறவுள்ளது.

சென்னை தி.நகரைச் சேர்ந்த அஸ்வத் இயற்கை அங்காடி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த திருவிழாவில் 45-க்கும் அதிகமான பாரம்பரிய நெல் வகைகள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. மேலும் இந்த விழாவில் கலந்துக்கொள்ளும் பொதுமக்களுக்கு பாரம்பரிய நெல்களில் சமைக்கப்பட்ட உணவு குறைந்த விலையில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாரம்பரிய நெல் வகைகள் உள்ளன. தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் மட்டும் 5 ஆயிரம் நெல் ரகங்கள் உள்ளன. ஆனால் சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அவை வேகமாக அழிந்து வருகின்றன. இதுவரை தமிழகத்தில் மட்டும் 200 வகையான பாரம்பரிய நெல் வகைகள் கண்டறியப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மொத்தமாக தென் இந்தியாவில் 600 நெல் ரகங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விழாவின் மூலம் பொதுமக்களிடம் பாரம்பரிய நெல் வகைகளின் பயன்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படும் என விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ள அஸ்வத் இயற்கை நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த விழா குறித்து மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள 9841611045, 9884166772 ஆகிய மொபைல் எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

English Summary:Traditional rice festival in T Nagar Chennai