பலமுறை ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்ட சிம்பு நடித்த ‘வாலு’ திரைப்படம் ஜூலை 17ஆம் தேதி உறுதியாக ரிலீஸ் செய்யப்படும் என படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்பட்டது. ஆனால் திடீர் மாற்றமாக ‘வாலு’ படத்தை ரிலீஸ் செய்ய சென்னை நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிம்பு, ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ் மற்றும் பலர் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கிய வாலு திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று மேஜிக் ரேஸ் என்ற நிறுவனம் சமீபத்தில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘வாலு’ படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் வெளியீட்டு உரிமையை எங்களது நிறுவனத்துக்கு ரூ.10 கோடிக்கு 2013ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், ஆனால் தற்போது ஒப்பந்தத்தை மீறி வேறு நிறுவனம் மூலமாக இப்படத்தை வெளியிட முயற்சிப்பதாகவும், எனவே ‘வாலு’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வாலு படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் இந்த மனுவுக்கு பதிலளிக்க தனக்கு அவகாசம் தேவை என கோரிக்கை விடுத்ததை அடுத்து, வழக்கை ஜூலை 13ஆம் தேதிக்கு நீதிபதி, ஒத்தி வைத்தார். மேலும் அதுவரை ‘வாலு’ படம் வெளியிட இடைக்கால தடைவிதித்ததோடு, தற்போதைய நிலையிலேயே நீடிக்கவேண்டும் என்றும் அவர் தனது உத்தரவில் கூறியுள்ளார். நீதிபதியின் இந்த உத்தரவு காரணமாக ‘வாலு’ திட்டமிட்டபடி வெளிவருவது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
English Summary : After more changes in releasing “Vaalu”, Simbu decided to release on July 17th. Chennai high court now banned to release “Vaalu”.