எளிதில் மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பைகள் போன்ற பொருட்களை அதிகளவு பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் பல்வேறு முறைகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது தமிழக அரசும் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாணவர்கள் மற்றும் ஆசிர்யர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை முதன்மை கல்வி அதிகாரி அனிதா மாவட்ட கல்வி அதிகாரிகள் வாயிலாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், ஆபத்துகள் குறித்து மாணவ – மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணிப்பைகளை பயன் படுத்த அறிவுத்த வேண்டும். துணிப்பையை கையில் எடுப்போம். பிளாஸ்டிக் பையை கை விடுவோம் என்ற செய்தியை பள்ளியில் தினமும் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். பள்ளிகளில் எக்கோ கிளப், சுற்றச்சூழல் மன்றங்கள், தேசிய பசுமைப் படை அமைத்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடிவினா போட்டி, ஓவிய போட்டிகள், விவாத போட்டி, நாடகம், கண்காட்சிகள் நடத்தி பிளாஸ்டிக்கின் அபாயம் மற்றும் மறு சூழற்சி முறை குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போது முதல் கட்டமாக சென்னை பள்ளிகளில் பிளாஸ்டி பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடைமுறை படிப்படியாக தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழக மாணவ, மாணவிகளுக்கு பிளாஸ்டி பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து முழு அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary:Ban the Use of Plastic Materials inSchools Of Chennai.