vikramkapoorசென்னையை அடுத்த நந்தம்பாக்கத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டிற்கு உலகின் பல நாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வருகை தரவுள்ளதால் நந்தம்பாக்கம் பகுதியின்  சாலை மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது., ரூ.3 கோடி செலவில் நடைபெற்று வரும் இந்த பணிகளை நேற்று மாநகராட்சி கமிஷனர் விக்ரம்கபூர் ஆய்வு செய்தார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ள ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தை சுற்றி 3.07 கிலோ மீட்டர் தூரம் சாலைகள் மேம்படுத்தி தார்சாலைகள் அமைக்கப்பட உள்ளதாகவும், அங்குள்ள மைதானங்களில் வளர்ந்திருக்கும் முட்புதர்களை அகற்றி அங்கு மாநாட்டுக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட இருப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், துளசிங்கபுரத்தில் இருந்து அடையாறு ஆறு வரை புதிதாக 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் கால்வாய்கள் அமைக்க ரூ.3 கோடி செலவில் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன. இந்த பணிகளையும் சென்னை மாநகராட்சி கமிஷனர் விக்ரம்கபூர் ஆய்வு செய்தார். அப்போது பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். மேலும், பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

ஆய்வின்போது மாநகராட்சி துணை கமிஷனர் (பணிகள்) கந்தசாமி, முதன்மை சுகாதார அலுவலர் ஜெகதீசன், மழைநீர் வடிகால் துறை தலைமை பொறியாளர் பாபு ராஜேந்திரன், மண்டல உதவி கமிஷனர் என்.மகேசன், செயற்பொறியாளர் ஆர்.முரளி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

English Summary:World Investors Conference in Chennai.corporation commissioner Personally review.