வரும் டிசம்பர் 11ஆம் தேதி அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு முழு வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் அன்றைய தினம் வங்கிகளின் பணிகள் முடங்கும் என கருதப்படுகிறது. வங்கிகள் தனியார்மயத்தை கண்டித்தும், ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் உள்ள சில முரண்பாடுகளை களைதல் ஆகிய பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மூத்த துணைத் தலைவர் டி.தாமஸ் பிரான்கோ அவர்கள் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்டது. அப்போது, ஓய்வூதியம் மற்றும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தனியாக ஒரு ஒப்பந்தம் போடுவதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, விவாதித்து முடிவெடுப்பதற்காக கடந்த 6 மாதங்களாக இந்திய வங்கிகள் சம்மேளனத்துக்கு பல முறை கடிதம் அனுப்பியும் இதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
மேலும், அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் அரசின் பங்கை 52 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், அரசின் பங்கை படிப்படியாக குறைத்து வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக வங்கிகளில் ஏரளாமானோர் ஓய்வு பெற்றுள்ளனர். இதனால், ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. புதிய ஊழியர்களை நியமிக்க வங்கி நிர்வாகங்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளன. மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வரும் டிச.11-ம் தேதி அகில இந்திய அளவில் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, இந்திய வங்கிகள் சம்மேளனத்திடம் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தாமஸ் பிரான்கோ கூறினார்.
English summary-Banks strike on Dec 11th,2015 all over india