கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற 12ஆம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகள் வரும் மே மாதம் 7ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 12ஆம் வகுப்பு முடிக்கவுள்ள மாணவர்களுக்கான பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே மாதம் முதல் வாரத்தில் விநியோகிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க எந்தத் தேதியில் இருந்து விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்பதும் இன்னும் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த ஆண்டைப் போன்றே எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான கலந்தாய்வை பி.இ. கலந்தாய்வுக்கு முன்பு நடத்த முடிவு செய்திருப்பதாகவும் இந்த முடிவு அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற கலந்தாய்வு ஒருங்கிணைப்புக் குழுவின் இரண்டாவது கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் கூறிய போது, “2015-16 பொறியியல் கலந்தாய்வு, எந்தவித மாற்றங்களும் இல்லாமல் கடந்த ஆண்டைப் போன்றே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மே முதல் வாரத்தில் விண்ணப்ப விநியோகம் தொடங்கப்படும். ஜூலை 31-ஆம் தேதிக்கு முன்னதாக கலந்தாய்வு முடிக்கப்பட்டு விடும் என அவர்கள் தெரிவித்தனர்.
English Summary: BE and MBBS Application giving Date Announced by Anna University.