கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி தொடங்கிய பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமையுடன் அதாவது இன்றுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இதுவரை 79,990 பேர் மட்டுமே அரசு ஒதுக்கீட்டு பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளதாகவும், .மாணவர் சேர்க்கையின்றி 1,05,680 பி.இ. இடங்கள் காலியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இன்று சுமார் 500 இடங்கள் பூர்த்தியானாலும் ஒரு லட்சத்து 5 ஆயிரம் இடங்கள் நிச்சயம் காலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு பொறியியியல் படிப்புகளில் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு ஜூன் 27ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 527 கல்லூரிகளில் 1,85,670 இடங்கள் இடம்பெற்றிருந்தன. இன்றுடன் இந்த கலந்தாய்வு நிறைவுபெற உள்ள நிலையில், இதுவரை அழைக்கப்பட்ட 1,22,608 பேரில் 79,990 பேர் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர். அழைக்கப்பட்டவர்களில் 42,204 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. 414 பேர் இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.
கடந்த 2014-15 கல்வியாண்டில் பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு முடிய ஒரு நாள் இருக்கும்போது 1 லட்சம் பேர் சேர்க்கை பெற்றிருந்தனர். ஆனால் அதற்கு மேலும் இந்த ஆண்டு பி.இ. இடங்கள் காலியாக இருந்தன.
2015-16 கல்வியாண்டில் கலந்தாய்வு முடிய ஒரு நாள் இருக்கும்போது, 98 ஆயிரம் பேர் சேர்க்கை பெற்றிருந்தனர். 94,772 பி.இ. இடங்கள் சேர்க்கை இன்றி காலியாக இருந்தன. ஆனால், நிகழாண்டில் 79,990 பேர் மட்டுமே சேர்க்கை பெற்றிருக்கின்றனர். 1 லட்சத்து ஐந்தாயிரத்தும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன.
அதாவது சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 1,04,571 இடங்களும், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 1,105 இடங்களும், அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 4 இடங்களும் சேர்க்கை இன்றி காலியாக உள்ளன.
கடந்த ஆண்டுகளைப் போலவே பி.இ. இயந்திரவியல் பிரிவில் அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்தப் பிரிவில் 18,125 பேர் சேர்ந்துள்ளனர். இவர்களில் 266 பேர் மாணவிகள் ஆவர். இதற்கு அடுத்தபடியாக மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் பிரிவில் 14,993 பேரும், பி.இ. கணினி அறிவியல் பிரிவில் 13,701 பேரும், பி.இ. கட்டடவியல் பிரிவில் 8,671 பேரும் சேர்க்கை பெற்றுள்ளனர். தமிழ் வழி பொறியியல் படிப்புகளைப் பொருத்தவரை பி.இ. கட்டடவியல், இயந்திரவியல் இரண்டு பிரிவுகளிலும் தலா 174 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர்.
English Summary: BE Counseling completed today. More than a lakh seats available