பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் ஆட்சி அமைத்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று நிதீஷ்குமார் வாக்குறுதி அளித்திருந்தார். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள நிதீஷ்குமார் இன்று முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இது குறித்த சட்ட திருத்தம் நேற்று பீகார் மாநில சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.
குரல் ஓட்டெடுப்பு மூலம் அந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பீகாரில் இனி யாரும் மது விற்பனை செய்யக்கூடாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கிடையே இன்று முதல் மது குடிக்க மாட்டோம் என்று ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் நீதிஷ்குமார் கூறினார். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கைகளை உயர்த்தி ஒருமித்த குரலில், இனி நாங்கள் மது குடிக்க மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்றனர். பிறகு அது தொடர்பான ஒருதீர்மானம் கொண்டு வரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பீகாரில் பூரண மது விலக்கை கொண்டு வர கடும் தண்டனை சட்டங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது. தடையை மீறி மது விற்பனை செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு வேண்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் போராடி வருகின்றன. இந்தியாவில் உள்ள பின் தங்கிய மாநிலமான பீகார் மாநிலமே மதுவால் வரும் வருமானத்தை இழக்க துணிந்த நிலையில் இதே முடிவை ஏன் தமிழகத்தில் எடுக்கக்கூடாது? என்று சமூக ஆர்வலர்களும் கேள்வி கேட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் முக்கிய அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary: Bihar to ban liquor in phases from today.