westindies1416உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று இரவு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியிடம் போராடி தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பையும் இழந்ததால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் அரையிறுதியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் அந்த அணியுடன் மோதும் அணியை முடிவு செய்யும் இரண்டாவது அரையிறுதி போட்டி நேற்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஷம்மி, முதலில் பந்து வீசுவதாக முடிவெடுத்தார். இதனால் முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் ரஹானே ஆகியோர் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ரோஹித் சர்மா 43 ரன்களும், ரஹானே 40 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய விராத் கோஹ்லி அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். இதில் 11 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். இந்திய அணி 20 ஓவர்களில் 192 ரன்கள் குவித்தது.

193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை விரட்டிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கெய்லே மற்றும் சாமுவேல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய வீரர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணியின் சிம்மன்ஸ், சார்லஸ் ,அற்றி, ரூஷல் ஆகியோர்களின் அதிரடி ஆட்டம் அந்த அணிக்கு சாதகமாக மாறியது.

மேற்கிந்திய தீவுகள் அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ஆட்டமிழக்காமல் 82 ரன்களை குவித்த சிம்மன்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே வரும் 3ஆம் தேதி ஞாயிறு அன்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை பெறும்.

English Summary:World T-20 Cricket: West indies beat India in Semifinal.