சென்னையில் உள்ள முக்கிய கோயில்களில் ஒன்றாக கருதப்பட்டு வரும் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் கும்பாபிஷேம் நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி நாளை அதாவது ஏப்ரல் 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், வசதி கருதியும் காலை 7 மணியில் இருந்து கும்பாபிஷேகம் முடியும் வரை மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி, கச்சேரி சாலையில் இருந்து மத்தள நாராயணன் தெரு வரையிலும், சித்ரகுளம் கீழ் தெருவில் இருந்து சித்ரகுளம் வடக்குத் தெரு வரையிலும், நடுத் தெரு, சுந்தரேஸ்வரர் தெருவில் இருந்து கிழக்கு மாடத் தெரு வரையிலும், ஆர்.கே.மடம் சாலையில் இருந்து தெற்கு மாட தெரு வரையிலும், புனிதமேரி சாலையில் இருந்து ஆர்.கே.மடம் சாலை சந்திப்பு வரையிலும், டாக்டர் ரங்கா சாலையில் இருந்து வெங்கடேச அக்ரஹாரம் சாலை வரையிலும், லஸ் சந்திப்பில் இருந்து ஆர்.கே. மடம் சாலை வரையிலும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.

மேலும், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, கச்சேரி சாலையில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையாறு செல்லும் வாகனங்கள் லஸ் சர்ச் சாலை, டிசில்வா சாலை, பக்தவச்சலம் சாலை, டாக்டர் ரங்கா சாலை, சி.பி.ராமசாமி சாலை, புனிதமேரி சாலை, ஆர்.கே.மடம் சாலை வழியாக மந்தைவெளியை அடையலாம். அடையாறில் இருந்து ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் சாலை, மந்தைவெளி, வி.கே.அய்யர் சாலை, சிருங்கேரி மடம் சாலை, வாரன் சாலை, டாக்டர் ரங்கா சாலை, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, லஸ் சர்ச் சாலை, கற்பகம்மாள் நகர், விவேகானந்தா கல்லூரி, பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக லஸ்ûஸ அடையலாம். மயிலாப்பூர் கோயில் குளம் தெருவில் உள்ள மாநகரப் பேருந்து நிறுத்தம் லஸ் சர்ச் சாலை அமிர்தாஞ்சன் நிறுவனம் அருகே மாற்றப்படும்.

ஏப்ரல் 3-ஆம் தேதியன்று மயிலாப்பூர் சன்னதி தெரு, கிழக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி, ராமகிருஷ்ண மடம் சாலை, வடக்கு மாட வீதி ஆகியப் பகுதிகளில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை. அதேபோல கும்பாபிஷேகத்தை காண ராயப்பேட்டை, சாந்தோம் பகுதியில் இருந்து வருவோர் லஸ் சர்ச் சாலையின் வடக்கு பகுதியில் உள்ள காமதேனு திருமண மண்டபம் அருகேயும், கிளப் ஹவுஸ் மைதானத்திலும் தங்களது வாகனத்தை நிறுத்தலாம். தேனாம்பேட்டை,நந்தனம் பகுதியிலிருந்து வருவோர் சிருங்கேரி மடம்,ரங்கா சாலை வழியாக வெங்கடேச அஹ்ரஹாரம் சாலையில் உள்ள எம்.ஆர்.டி.எஸ். மேம்பாலம், சாய்பாபா கோயில் ஆகியப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தலாம். அடையாறு பகுதியில் இருந்து வருவோர் ராமகிருஷ்ணமடம் சாலையில் உள்ள பி.எஸ்.எஸ். பள்ளி மைதானத்தில் தங்களது வாகனங்களை நிறுத்தலாம்

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: Chennai Traffic has been changed due to Mylapore Kabaleswarar Temple Consecrated on Tomorrow.