சென்னை: தீபாவளியை முன்னிட்டு, சென்னை, கோயம்பேட்டில், சிறப்பு முன்பதிவு கவுன்டர்களை திறந்து வைத்து, நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: நாளை, போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு, போனஸ் வழங்கப்படும்.
மேலும், 2017, நவ., முதல், 2018 பிப்., வரையிலான காலகட்டத்தில், ஓய்வு பெற்றவர்களுக்கு, உரிய பணப்பலன்கள் வழங்கப்படும். தி.மு.க., தொழிற்சங்கத்தினர், 2017ல், பொங்கல் பண்டிகைக்கு போராட்டம் செய்தனர். இந்த ஆண்டு, தீபாவளிக்கு போராட்டம் செய்ய நினைக்கின்றனர். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, 1,000 கோடி ரூபாய் செலவில், ஊதிய உயர்வு வழங்கி உள்ளோம்.
வேலை நிறுத்தம் என்பது, தொழிலாளர்களை, தொழிற்சங்கங்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க, திசை திருப்பும் வேலை. போராட்டம் நடைபெற்றால், அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்ய, நாங்கள் தயாராக உள்ளோம். அதிக கட்டணம் வசூலிக்கும், ‘ஆம்னி’ பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு, 36 பஸ்களை சிறைபிடித்து, அபராதம் வசூலித்துள்ளோம். அரசு பஸ்கள் இருந்தும், ஆம்னி பஸ்களை விரும்பி செல்பவர்களை தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.