எத்தனையோ சிறந்த உருவாக்கங்களும் கண்டுபிடிப்புகளும் நம்மை அன்றாடம் என்ன, ஒவ்வொரு மணித்துளியும் வந்தடைந்து கொண்டிருந்தாலும், ஒரு ஆகச் சிறந்த படைப்பாகத் திகழ்வது ‘ப்ரெய்லி’ எழுத்துமுறை ஆகும்.
நம் ‘பார்வைப் போராளி’, பார்வை மாற்றுத் திறனாளி’ சகோதர, சகோதரிகள் வாழ்வினை மெருகூட்டி, புத்துணர்ச்சி பெறச் செய்வது, “ப்ரெய்லி’ எழுத்து முறை.
லூயி ப்ரெய்லி பார்வையற்றோர் எளிதாகப் படிக்க ஏதுவாக ஒரு எழுத்து – குறீயிடு முறையை 1825 ஆம் ஆண்டு கண்டறிந்தார். அப்போது அவருக்கு வயது 15.
லூயிக்கு மூன்று வயது இருக்கும் போது, தனது தந்தையின் பட்டறையில் எதிர்பாராத விதமாக, கூரிய ஊசி – தோல் போன்ற பொருட்களைத் தைக்கும் ஊசி – ஒரு கண்ணின் உள் சென்றுவிட்டது. ஒரளவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப் பட்ட போதும், அந்தக் கண் மட்டுமல்லாமல், மற்றொரு கண்ணும், தொற்றினால் பாதிக்கப்பட்டு, இரு கண்களிலும் பார்வை இழந்தான் சிறுவன் லூயி ப்ரெய்லி.
படிப்பில் மிகுந்த ஆர்வமும், சிறந்த ஞாபகச் சக்தியும், செம்மையான நுண்ணறிவும் கொண்டிருந்த ப்ரெய்லி, பிரான்ஸ் நாட்டின் பார்வையற்ற இளைஞர்களுக்கான ராயல் இன்ஸ்டிடுயுட்டில் சேர்ந்தான்.
அங்கே அவனுடைய ஆசிரியர் வாலண்டைன் ஹுவே, தன் பார்வையற்ற மாணாக்கர்கள் எழுத்துகளை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு முறையைப் பின்பற்றினார்.
தடித்த தாள்களில் எழுத்துகள் புடைத்திருக்கும். மாணவர்கள் அதைத் தடவி உணர்ந்து கொள்ள வேண்டும் இது, பார்வையற்றோர் எழுத்துருக்களை அறிய ஒரு முயற்சி என்றாலும், நடைமுறையில் சற்று கடினமான முறையே !
அப்பள்ளிக்கு 1821ம் ஆண்டில் சார்லெஸ் பார்பியர் என்பவர் வந்திருந்தார். அவர் பிரான்ஸ் ராணுவத்தில் கேப்டனாக பணிபுரிந்தவர். ராணுவ வீரர்களின் தகவல் பரிமாற்றத்துக்காக அவர் ஒரு “குறியீடு” முறையைப் பயன்படுத்தினார். “நைட் ரைட்டிங்” எனவும் “ஸோனோகிராபி” எனவும் அறியப்படும் அக்குறியீட்டு எழுத்துரு முறை அதிகாரபூர்வமாக அங்கிகரிக்கப் படவில்லை.
சார்லெஸ் பார்பியர் தன்னுடைய “புள்ளிகள் – கோடுகள் குறீயீட்டு முறையை”, விழியிழந்தோருக்காவது பயன்படட்டுமே என, இப்பள்ளிக்குத் தெரியப்படுத்தினார்.
தடித்த தாளில் புடைத்திருக்கும் புள்ளிகளையும், கோடுகளையும் தடவிப் பார்த்து, பொருள் உணர்ந்து கொள்ள வேண்டும். இதுவும் ஒரு சிறந்த முயற்சியே ! எனினும், சற்றுக் கடினமான முறையே !
தாக்கமும் நோக்கமும்: இந்த இரு படைப்புகளின் தாக்கமும், தன் போன்ற “பார்வை சவால் போராளிகள்” எளிதாகப் படிக்கும் முறையைக் கண்டறிய வேண்டும் என்ற நோக்கமும், சிறுவன் ப்ரெய்லியின் சிந்தனையைத் தூண்டிய ஊக்கிகள்.
தன் தந்தையின் பட்டறையில் எந்த ஊசி, தன் பார்வைக் குறைபாட்டுக்குக் காரணம் ஆனதோ, அதே போன்ற கருவியினால், சற்று தடித்த காகிதத்தில், துளைகளிட்டு ஒரு குறீயிடு முறையை உருவாக்கினான் 15 வயது பாலகன் ப்ரெய்லி.
செவ்வக வடிவில் நீளவாட்டில் மூன்று புள்ளிகளூம், அகலவாட்டில் இரண்டு புள்ளிகளும் கொண்ட ஒரு அமைப்பை ஏற்படுத்தினார். புள்ளிகள் புடைத்திருக்கும். அதனைத் தடவிப் பார்த்து உணர்ந்து கொள்ளலாம்.
பிரென்ச் மொழியின் ஒலிகளுக்கேற்ப லூயி ப்ரெயில் தனது குறியீடு முறையைத் தொகுத்திருந்தார்.
தனது பள்ளியிலேயே ப்ரெய்லி ஆசிரியராகவும் பணியாற்றினார். அப்பள்ளியில், ப்ரெய்லி எழுத்து முறை முலமாக பார்வையற்ற மாணவர்களுக்கு பிரென்ச் அரிச்சுவடி சொல்லித்தரப்பட்டது.
ப்ரெய்லி வாழ்ந்த காலத்தைவிட, அவர் மறைந்த பின், ப்ரெய்லி முறையின் தாக்கம் உலகெங்கும் காணப்பட்டது. ப்ரெய்லி எழுத்து முறையின் வீச்சும் வளர்ச்சியும்
புடைப்பான புள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் அமைப்பிடத்தைப் பொறுத்து, மொத்தம் அறுபத்து நான்கு குறியீடுகளை இம்முறையில் உணர்த்தலாம். ப்ரெய்லி எழுத்து முறையில் அரிச்சுவடி தவிர எண்களும், கணித குறியீடுகளும் இணைந்தன. காலப்போக்கில் ஆங்கில ப்ரெய்லி முறை மற்றும் நிறுத்தக்குறிகளுக்கான குறியீடுகளும் இணைந்தன.
விழிக்குறைபாடு உள்ளவருக்கு கல்வி பயில இது ஒரு சிறந்த வழி என்பதனால்,மெல்ல மெல்ல அனைத்து மொழிகளிலும் ப்ரெய்லி முறை ஒலி – குறியீடு தொடர்பு முறை அறிமுகம் செய்யப்பட்டது.
1892 ம் ஆண்டு ஆறு விசைகளைக் கொண்ட ப்ரெய்லி தட்டச்சை ஹால் என்பவர் உருவாக்கினார். பின்னாளில், அதாவது, 1950 களில், “பெர்கின்ஸ் ப்ரெய்லர்” என்ற மேம்படுத்தப்பட்ட தட்டச்சு, பார்வை இழந்தோருக்கான பெர்கின்ஸ் பள்ளி ஆசிரியரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, நன்கு மேம்படுத்தப்பட்ட, அதிக எடை இல்லாத ப்ரெய்லர் தட்டச்சுகள் தற்போது உபயோகத்தில் உள்ளன. ஸ்மார்ட் பிரெய்லர் கருவிகள் உண்மையாகவே மிகத் திறம்பட “ப்ரெய்லி எழுத்து தகவலை குரல் வடிவில் தருவது, இயல்பான எழுத்து தகவல்களையும் ஒலி மற்றும் பிரெயில் முறையில் தருவது, பல மொழிகளின் பிரெயில் குறியீடுகளை எளிமையாகத் தருவது போன்ற வேலைகளை செய்கிறது.
கணிணிகளுடன் ப்ரெய்லி டிஸ்ப்ளே இணைக்கப்பட்டு, பார்வை மாற்றுத்திறனாளிகள் எல்லாவிதமான கணிணி செயல்பாடுகளை தாங்களே செய்து கொள்ளும் அளவில் வடிவமைக்கப்படுகிறது..
மற்றுமொரு மாற்று ஏற்பாடாக, “ஸ்கீன் ரீடர்” என்ற தொழில் நுட்பம் முலமாக, குரல் வழியே, கணிணி அல்லது கைபேசியில் உள்ள எல்லா தகவல்களையும் அறிந்து கொள்ளும் தொழில் நுட்பமும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குப் பெரும் வரப்பிரசாதமாகும்.
இவ்வளவும் பேசிவிட்டு ஆண்ட்ராய்டு ஆப்களின் தாக்கத்தைப் பற்றிக் கூறாமல் இருக்கமுடியுமா?
பார்வைப் போராளிகளுக்கென, கோப்புகளை படித்துச் சொல்லும் ‘வாய்ஸ் ஒவர்’, இருக்கும் இடத்தை குரல் வழி உணரச் செய்யும் ஆப்கள் மட்டுமல்லாமல், ப்ரெயில் முறையைப் பயன்படுத்தும், தொடு உணர்வால் காலத்தை அறிய ஸ்மார்ட் வாட்ச், சாதரண கோப்புகளை ப்ரெயில் வழியில் மாற்றும் ஆப், டிக்ஷனரி ஆப் என அநேக அவதாரங்கள் உள்ளன.
எல்லாவற்றிற்கும் அடிப்படை லூயி ப்ரெய்லி கண்டெடுத்த “செவ்வகச் செல் முறை” தானே ! அதை நாம் போற்றிக் கொண்டாட வேண்டாமா ?
ப்ரெய்லி நாள்: விழிகளின் கதையை கண்ணிரீல் எழுதாமல் கல்வி ஏட்டில் எழுதிய லூயி ப்ரெய்லியின் பிறந்த நாள் 1809 ஜனவரி 4 ம் நாள் ஆகும். அவரின் நினைவைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 4 ம் நாள் ப்ரெய்லி தினமாக உலகெங்கும் அனுசரிக்கப் படுகிறது.
மாற்றுத் திறனாளிகள், இயல்பானவர்களை விடவும் திறமைசாலிகள், நுண்ணறிவு மிக்கவர்கள், படைப்பாளிகள் என்பதில் மாற்றுக்கருத்து உண்டோ? லூயி ப்ரெயில் அவர்களின் வாழ்வே அதற்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது.
கட்டுரை ஆசிரியர்: கமலா முரளி திருமதி.கமலா, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். ஆசிரியராக கல்விப் பணியில் இருபத்தெட்டு ஆண்டுகள் பணிபுரிந்தவர்., கேந்த்ரிய வித்யாலயா அகில இந்திய சிறந்த ஆசிரியருக்கான பரிசு பெற்றவர். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆங்கில வழியில் பல சொற்பொழிவுகளும் பயிற்சி வகுப்புகளும் நடத்தியிருந்தாலும், தாய் மொழியாம் தமிழ் மொழியில் கதை, கவிதை மற்றும் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.