சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் அரசு கண் பரிசோதகர் பட்டயக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், உலக கண் பரிசோதகர் விழிப்புணர்வு தின விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா ஆகியவை நேற்று நடைபெற்றது.
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவில் மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
டாக்டர் கீதாலட்சுமி பேசியபோது, கண்களில் ஏற்படும் குறைபாடுகளை நீக்க புதிய தொழில்நுட்பங்கள் மூலம் சிகிச்சை அளித்து வரும் அதே நேரத்தில் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய கண் பரிசோதர் படிப்புகளையும் மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.
தற்போது எழும்பூரில் செயல்பட்டு வரும் அரசு கண் பரிசோதகர் பட்டயக் கல்லூரியில் வரும் கல்வியாண்டு முதல் பி.எஸ்ஸி. கண் பரிசோதகர் படிப்பு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் அனுமதி கிடைத்தவுடன், இந்த படிப்பிற்கு தேவையான பாடத் திட்டம் உருவாக்கப்படும். பி.எஸ்ஸி. படிப்பில், 10 முதல் 20 இடங்கள் வரை அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது என்று டாக்டர் கீதாலட்சுமி கூறினார்.
தற்போது கண் பரிசோதகர் பட்டயக் கல்லூரியில் 2 ஆண்டு கால கண் பரிசோதகர் பாடப் பிரிவில் ஆண்டுக்கு 30 பேர் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த விழாவில் அரசு கண் மருத்துவமனையின் இயக்குநர் நமீதா புவனேஸ்வரி, நிலைய மருத்துவ அதிகாரி கற்பகம் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
English Summary : In Global Eye Examiner Awareness Dr. Geetha Lakshmi addressed a note that eyes are treated with the new technologies which provides new studies for students.