சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இருந்து ஆந்திரா, தெலங்கானாவுக்குச் செல்லும் புறநகர் பேருந்துகளுக்கு என தனியாக ஒரு பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது. இதன்படி, சென்னையை ஒட்டியுள்ள மாதவரத்தில் 8 ஏக்கர் பரப்பில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 560 சதுர அடி கட்டுமான பரப்பளவில் புதிய புறநகர் துணை பேருந்து நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது.
சென்னையில் இருந்து நெல்லூர், திருப்பதி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். இதனால் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசல் வெகுவாகக் குறையும்.
இந்தப் பேருந்து நிலையம் தமிழகத்தில் முதல்முறையாக தரைதளத்தில் 42 பேருந்துகளும், மேல் தளத்தில் 50 பேருந்துகளும் ஒரே நேரத்தில் நிறுத்தக்கூடிய இரு அடுக்குகள் கொண்டதாக அமையும். மேலும், தாய்மார்கள் பாலூட்டும் அறை, மருந்தகம், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான ஓய்வறை, பயணிகள் காத்திருக்கும் அறை, குடிநீர், கழிப்பறை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளுடனும் இப்பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மாதவரம் அடுக்குமாடி புறநகர் பேருந்து நிலையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 10-ம் தேதி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
இந்நிலையில் இன்று முதல் ஆந்திரா, தெலங்கானா செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து இன்று முதல் இயக்கப்படுகின்றன. திருப்பதி, காளஹஸ்தி, நெல்லூர், கடப்பா உள்ளிட்ட ஆந்திர மாநிலத்திற்குச் செல்லும் 143 பேருந்துகளும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்வது குறிப்பிடத்தக்கது.