பிரீபெய்டு முறையில் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு இன்று முதல் கேபிள் ‘டிவி’ ஒளிபரப்பு நிறுத்தப்படும் என, தமிழக அரசு கேபிள் நிறுவனம் அறிவித்துள்ளது. அரசு கேபிள் நிறுவனத்தால் இதுவரை 35 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இலவச ‘செட்டாப் பாக்ஸ்’ வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ‘பிரீபெய்டு’ எனப்படும் முன்கூட்டியே கட்டணம் செலுத்தி ‘டிவி’ ஒளிபரப்பு சேவையை பெறும் வசதி தமிழகம் முழுவதும் இன்று அமலுக்கு வருகிறது. அதன்படி பிரீபெய்டு கட்டணம் செலுத்தாதவர்களுக்கு,இன்று முதல் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து அரசு கேபிள் ‘டிவி’ அதிகாரிகள் கூறியதாவது: புதிய பிரீபெய்டு முறை பற்றி இரு மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டு விட்டது. முன்கூட்டியே கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் பற்றியும் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது. அதன்படி பிப்ரவரி மாத கட்டணத்தை ஜனவரி இறுதியில் செலுத்தி இருக்க வேண்டும்.
இவ்வாறு செலுத்தாதவர்களுக்கு இன்று கேபிள் ஒளிபரப்பு நிறுத்தப்படும். இந்த புதிய முறையில் 100 இலவச சேனல்களின் மாத கட்டணம் வரியுடன் சேர்த்து 153 ரூபாய். ஆனால் அரசு கேபிள் ‘டிவி’யில், வரியுடன் சேர்த்து 140 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும் சேனல்களை பெற விரும்பினால் கேபிள் ஆப்பரேட்டர்களிடம் அதற்கான கட்டணத்தை செலுத்தி பெறலாம்.