திருமணத்திற்கு பெண் பார்க்கவோ அல்லது மாப்பிள்ளை பார்க்கவோ முன்பு புரோக்கர்களைத்தான் பெற்றோர்கள் அணுகுவார்கள். ஆனால் தற்போது இண்டர்நெட்டில் பல மேட்ரிமோனியல் இணையதளங்கள் இதற்காக உருவாகியுள்ளது. ஒருசில மேட்ரிமோனியல் இணையதளங்கள் டேட்டிங் போன்ற தவறான செயல்களுக்கு பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கத்தில் மத்திய தொலைத்தொடர்புத்துறை புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புதிய விதிமுறைகளின்படி, திருமண தகவல் பரிமாற்றத்துக்கான இணையதளங்களை அணுகுவோரின் உண்மையான நோக்கம், மணமகன் அல்லது மணமகளை தேடுவதுதானா? என்பதை இந்த இணையதளங்களின் நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் திருமணம் தொடர்பான தகவல்களைக் கோரி, இணையதளத்தில் தங்களைப் பற்றிய சுய விவரங்களைப் பதிவு செய்வோர், தங்களது அடையாளச் சான்று, இருப்பிடச் சான்று ஆகியவற்றின் நகல்களை அல்லது பதிவேற்றம் செய்யப்பட்ட இந்தச் சான்றுகளை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
திருமணத் தகவல் பரிமாற்றத்துக்கான இணையதளங்களை “டேட்டிங்” போன்ற தவறான செயல்களுக்கு பயன்படுத்துவதையும், இந்த இணையதளங்களில் ஆபாசப் படங்கள் வெளியிடப்படுவதையும் தடுக்க இப்புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதையடுத்து, திருமணத் தகவல் பரிமாற்றத்துக்கான இணையதளங்களும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என தொலைத்தொடர்புத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
English Summary: Central Government New Regulations for Matrimonial Websites.