ஆர்.கே.செல்வமணி இயக்கிய ‘செம்பருத்தி’ படத்தில் அறிமுகமான நடிகை ரோஜா, அதன் பின்னர் அதிரடிப்படை, உழைப்பாளி, வீரா, மக்களாட்சி, போன்ற பல படங்களில் நடித்தார். தெலுங்கிலும் பல வெற்றிப்படங்களில் நடித்த ரோஜா, சமீபத்தில் ஆந்திராவில் நடைபெற்ற தேர்தலில் நகரி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏஆக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் தனது தொகுதி மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் ரோஜா, இன்று காலை சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ள தென்னக ரெயில்வே அலுவலகத்துக்கு திடீரென வருகை தந்தார். அங்கு பொது மேலாளர் அசோக்சிங்காலை நேரில் சந்தித்த ரோஜா கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னையில் இருந்து மும்பை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் நகரியில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இதுபோல் மற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்களையும் நகரியில் நிறுத்த வேண்டும்.
சென்னையில் இருந்து திருத்தணி வரை மின்சார ரெயில் இயக்கப்படுகின்றன. அந்த ரெயிலை புத்தூர் வரை நீட்டிக்க வேண்டும். நகரியில் உள்ள ரெயில் நிலையம் பராமரிப்பு இன்றி கிடக்கின்றன. அவற்றை சுத்தப்படுத்தி புதுப்பிக்க வேண்டும். பயணிகளுக்கு ரெயில் நிலையங்களில் நடைபாதை மேம்பாலங்களும் அமைக்க வேண்டும்.
இவ்வாறு ரோஜாவின் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
English Summary : Actress Roja requested to extend Central – Thiruthani train to Puttur.